இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்டில் (ஒத்திவைக்கப்பட்ட போட்டி) தோற்றதால், அந்த தொடர் 2-2 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
டி20 தொடரை கைப்பற்றியதால் இந்திய வீரர்கள் உற்சாகமாகவே களமிறங்குகின்றனர். அதேநேரம் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரில் வலுவாக மீண்டுவர முயற்சி மேற்கொள்ளும். மோர்கன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து களமிறங்குகிறது. பென் ஸ்டாக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளது அந்த அணியின் பேட்டிங்கை வலுப்பெறச் செய்யும்.
இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியாவும், பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹலும் நல்ல நிலையில் உள்ளனர். காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. விராட் கோலிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் இடுப்பில் அவருக்கு காயம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட்கோலி/ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
இதையும் படிக்க: 'கிரிக்கெட்டில் ஃபார்ம் குறைவது இயல்புதான்' - விராட் கோலிக்கு ரோகித் சர்மா ஆதரவு