உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதியாட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் மூன்றாவது இடத்துக்கான போட்டி இன்று நடைபெறுகிறது.
முன்றாவது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இரவு ஏழரை மணிக்குத் தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் குரூப் சுற்றில் ஒரே பிரிவில் தான் இடம்பெற்றிருந்தன. குரூப் சுற்றில் பெல்ஜியம் அணி இங்கிலாந்தை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. அரையிறுதியில் பெல்ஜியம் அணி, பிரான்ஸிடம் போராடித் தோற்றது. இதேபோல் இங்கிலாந்து அணி குரேஷியாவிடம் பேராராடி வீழ்ந்தது. இதனால் மூன்றாது இடத்தை பிடிக்கும் முனைப்புடன் இவ்விரு ஐரோப்பிய அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இங்கிலாந்து;
முதல் சுற்றில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி, துனிசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் போராடி வென்றது. கூடுதல் நேரத்தில் கேப்டன் கேன் அடித்த கோலால் இங்கிலாந்துக்கு வெற்றி கைகூடியது. பனாமா அணிக்கு எதிரான போட்டியில் ஆறுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பெல்ஜியம் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஒரு கோல் வாங்கி போராடித் தோற்றது. டைபிரேக்கர் வரை நீடித்த நாக் அவுட் சுற்றில் கொலம்பிய அணியை போராடி வீழ்த்தியது. ஸ்வீடன் அணிக்கு எதிரான காலிறுதியில் இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் போராடி வென்றது. கூடுதல் நேரம் வரை நீடித்த அரையிறுதி ஆட்டத்தில் குரேஷிய அணியிடம் போராடித் தோற்றது.
பெல்ஜியம்;
லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் பனாமா அணியை மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் பெல்ஜியம் அணி தோற்கடித்தது. இரண்டாவது ஆட்டத்தில் துனிசியா அணியை ஐந்துக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் போராடி வென்றது பெல்ஜியம். ஜப்பான் அணியுடனான நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் போராடி வென்றது. ஆட்டத்தின் கடைசி நேரத்தில் நாசர் சாட்லி அடித்த கோல், பெல்ஜியம் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. பிரேசில் அணியுடனான காலிறுதி ஆட்டத்தில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் போராடி வென்றது. பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் பெல்ஜியம் அணி போராடித் தோல்வியை சந்தித்தது.
முதல் சுற்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய தெம்புடன் பெல்ஜியம் அணி களமிறங்குகிறது. பதிலடி கொடுக்கும் ஆதங்கத்துடன் இருக்கிறது இங்கிலாந்து அணி.