பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, மழையால் கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின், முதலாவது ஒரு நாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து சர்பிராஸ் அகமது தலைமையி லான பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக்கும் ஃபஹர் ஜமானும் களமிறங்கினர். 11 பந்துகளை சந்தித்து 3 ரன் எடுத்த நிலையில் பஹார் விக்கெட்டை வீழ்த்தினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். அடுத்து வந்த பாபர் ஆஸம், இமாம் உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்தார்.
12 வது ஓவரில் பிளங்கட் வீசிய பந்தில், விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து, வெளியேறினார் பாபர். அவர் 16 ரன் எடுத்திருந்தார். அடுத்து ஹரிஸ் சோஹல், இமாம் உல் ஹக்கும் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்தனர். 19 ஓவரின் கடைசி பந்தில், அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்திருந்த நிலையில், மழைக் கொட்டத் தொடங்கியது. இதனால் போட்டி தடைபட்டது.
தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இமாம் உல் ஹக், 42 ரன்னுடனும் ஹாரிஸ் சோஹைல் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பிளங்கட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.