இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியா உடனான லண்டன் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமியை ஆட்டமிழக்கச் செய்தபோது, ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத்தின் சாதனையை ஆண்டர்சன் முறிடியத்தார். இதுவரை, 143 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 564 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 800 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரை அடுத்து ஷேன் வார்னே 708, கும்ளே 619 விக்கெட்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 564 விக்கெட்களுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 563 விக்கெட்களுடன் மெக்ராத் 5வது இடத்தில் உள்ளார்.
அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தது குறித்து ஆண்டர்சன் கூறுகையில், “நான் அழாமல் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு இது மிகவும் சிறப்பு வாந்த சாதனை. இதுநான் இதுவரை செய்திராத ஒன்று. இங்கிலாந்து அணிக்காக மகிழ்ச்சியுடன் நான் விளையாடுகிறேன். அது ஒரு அற்புதமான பணி” என்றார்.
தன்னுடைய சாதனையை ஆண்டர்சன் முறியத்தது குறித்து மெக்ராத் கூறுகையில், “ஆண்டர்சன் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். என்னுடைய சாதனையை அவர் கடந்துவிட்டார். அவரது அடுத்த இலக்கு 600 விக்கெட். ஆண்டர்சனால் 600 விக்கெட் எடுக்க முடிந்தால், அது வியக்கதகு முயற்சியாக தான் இருக்கும். அவருக்கு விருப்பம் இருக்கும் வரை அவர் விளையாடலாம். முதல் இடங்களில் ஸ்பின்னர்கள் தான் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் கும்ளேவின் 619 விக்கெட்களையாவது கடக்க வேண்டும்” என்றார்.