பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் தரப்பில் அப்துல்லா ஷபீக் 102 ரன், கேப்டன் ஷான் மசூத் 151 ரன், சல்மான் ஆகா 104 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து நான்காம் நாளில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலமாக 27 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் ஓர் அணி 800 ரன்களைக் குவித்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 1379 ரன்கள் குவித்துள்ளன. ஆனால், இந்தப் பட்டியலில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் எடுத்த ரன்களே (1489) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் இலங்கையும் எடுத்த 1409 ரன்கள் உள்ளது.
மேலும், டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் பட்டியலிலும் இங்கிலாந்து குவித்த ரன்கள் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி முதல் இடத்தில் இலங்கை 952 ரன்கள், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து 903 ரன்கள், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து 849 ரன்களுடன் உள்ளது. இதில் அடுத்த மூன்று இடங்களிலும் இங்கிலாந்து அணியே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில், ஹாரி புரூக் 317 ரன்னும், ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் ஹாரி புரூக் முச்சதம் மற்றும் ஜோ ரூட் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், இரட்டைச் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டைச் சதம் விளாசிய சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஜோ ரூட் கடந்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலமாக, கடந்த 59 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக முச்சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய 28வது வீரர் என்ற பெருமையையும் ஹாரி ப்ரூக் பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முச்சதம் அடித்த வீரர்களில் ஹாரி 5வது வீரரானார். அதுபோல், இங்கிலாந்துக்காக முச்சதம் அடித்த வீரர்களில் 6வது வீரரானார்.
2004ஆம் ஆண்டு முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சேவாக் 309 ரன்கள் விளாசியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார். அவர் தற்போது 317 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், குறைந்த பந்துகளில் முச்சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஹாரி ப்ரூக் 2வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2008ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 278 பந்துகளில் முச்சதம் விளாசிய சேவாக் முதலிடத்தில் இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் ஒரு முச்சதம் விளாசி புதிய சாதனையையும் ஹாரி ப்ரூக் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் போட்டியில் 4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இணைந்து 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய வரலாறு படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் பட்டியலிலும் இந்த ஜோடியே முதலிடத்தில் உள்ளது.
பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி நான்காம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி தற்போது வரை 115 ரன்கள் பின் தங்கியுள்ளது. மீதம் 4 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெருவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.