ஐபிஎல் தொடரில் பங்கேற்க வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் 36 மணி நேரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-ஆவது ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி சனிக்கிழமை(நாளை) நடைபெறுகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றது. இதற்காக ஐபிஎல் தொடரில் பங்குபெறும் 8 அணிகளும் கடந்த மாதமே அமீரகம் சென்றுவிட்டன. இந்தத் தொடரில் வெளிநாட்டு வீரர்களும் பங்குபெறுகின்றனர்.
பொதுவாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க அமீரகம் வரும் வீரர்கள் அனைவரும் 6 நாள் தனிமைப்படுத்தப்படுவர். ஆனால் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்களை 36 மணி நேரம் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒருநாள் தொடர் நிறைவடைந்து அங்கிருந்து வீரர்கள் அமீரகம் வந்துள்ளனர். போட்டியில் பங்கேற்க குறைந்த நாளே இருப்பதால் தனிமைப்படுத்தப்படும் நாட்களை குறைக்க பிசிசிஐயிடம் வலியுறுத்தப்பட்டது.
இதன் காரணமாகவே இங்கிலாந்தில் இருந்து வரும் இருநாட்டு வீரர்களும் ஹோட்டல்களில் 36 மணி நேரம் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்புதான் அவர்கள் தத்தமது அணியினருடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.