நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து 2ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டிக்கு நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் கேப்டனாக பொறுப்பேற்றார். கேன் வில்லியம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. சிப்லி 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிராலே டக் அவுட்டானார். கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னிலும், ஒல்லி போப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ரோரி பர்ன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 81 ரன்னில் வெளியேறினார்.
பின்பு பரிதாபமான நிலையில் இருந்த இங்கிலாந்தை லாரன்ஸ் சிறப்பாக விளையாடி மீட்டார். இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. லாரன்ஸ் 67 ரன்னுடனும், மார்க் வுட் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இங்கிலாந்து. அதில் லாரண்ஸ் - மார்க் வுட் ஜோடி சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்தனர். இதில் மார்க் வுட் 41 ரன்கள் சேர்த்தபோது ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து வந்த ஸ்டுவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் சொற்ப ரன்களில் அவுட்டாகினார். இதனால் இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் லாரண்ஸ் மட்டும் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹென்றி 3, படேல் தலா 2 விக்கெட்டும், நீல் வாக்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.