அணியில் இடம் பிடித்து விளையாட தேர்வாகியிருந்தால் பயோ பபூளில் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
ரோகித் ஷர்மா உட்பட ஐந்து வீரர்கள் மெல்பேர்னில் கடந்த வெள்ளி அன்று உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டதே அவர் இப்படி சொல்ல காரணம். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் எழுந்துள்ளது.
“இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாட தயாராக இல்லையென்றால் இங்கே வராதீர்கள்” என சொல்லியிருந்தார் குயின்ஸ்லாந்து மாநில அமைச்சர் ராஸ் பேட்ஸ். இது இந்நாள் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களை கொதிப்படைய செய்துள்ளது.
இந்நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “அணியில் இடம் பிடித்து விளையாட தேர்வாகியிருந்தால் பயோ பபூளில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, அதற்கு மதிப்பு கொடுத்து தான் இருக்க வேண்டும். அதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே வரலாம். அப்படி இல்லையென்றால் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வரவே வேண்டாம். அப்படியே போய்விடலாம். அதைவிடுத்து இரண்டையும் எதிர்பார்க்க முடியாது” என சொல்லியுள்ளார்.
இந்திய அணி வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது.