ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரட்ட சதம் அடித்து அசத்தியுள்ளார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. நடந்துமுடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டேவிட் வார்னருக்காக விக்கெட்டை விட்டுக்கொடுத்த லபுசனே!
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கையில் வெர்ரென்னே 52, மர்கோஒ மஹாராஜ் 59 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாளான இன்று கைகோர்த்த டேவிட் வார்னர் மற்றும் லபுசனே சீரான விகிதத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 74 ரன்களுக்கு 1 விக்கெட் இருந்த நிலையில் வார்னர் சிங்கிளிற்கு அழைக்க லபுசனே முழுமையாக முதல் ரன்னை எடுத்துவிடுவார், ஆனால் பந்து ஓவர் துரோ செல்ல வார்னர் இரண்டாவது ரன்னிற்கு அழைப்பார், அப்போது லபுசனே இரண்டாவது ரன்னிற்கு செல்ல, சரியாக த்ரோவை அடிப்பார் கேசவ் மஹாராஜ். த்ரோவை பார்த்த லபுசனே வார்னரை கிரீஸ் செல்ல சொல்லவிட்டு திரும்ப வருவதற்குள் ரன் அவுட்டாகி 14 ரன்களுக்கு வெளியேறிவிடுவார். அப்போது வார்னர் 47 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
3 வருடங்களுக்கு பிறகு 100 அடித்த வார்னர்!
எப்போதும் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வார் டேவிட் வார்னர். அப்படியே இந்த போட்டியிலும் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வார்னர், 3 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தனது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
10ஆவது வீரராக 100ஆவது போட்டியில் 100 ரன்கள் அடித்து சாதனை!
தன்னுடைய 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த வார்னர், உலக கிரிக்கெட்டில் 100ஆவது போட்டியில் சதம் விளாசிய 10ஆவது வீரர் என்ற பெருமையை தக்கவைத்துக்கொண்டார்.
100ஆவது போட்டியில் 200 அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர்!
சதமடித்த பிறகு தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர், 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி தனது 3ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து 100ஆவது டெஸ்ட் போட்டியில் 200 அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர்.
மற்றும் ஜோ ரூட்டிற்கு பிறகு உலக அரங்கில் இரண்டாவதாக 200 அடித்த வீரர் என்ற பெருமையை சேர்த்துள்ளார் வார்னர்.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 200 அடித்த 2ஆவது ஆஸ்திரெலிய வீரர்!
கிறிஸ்துமஸ் தினத்திற்கு பிறகு நடைபெறும் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டி என அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் தினத்தன்று கூட விடுப்பு எடுக்காமல் பணியிலோ அல்லது கடமையிலோ ஈடுபடும் மக்களுக்காக இது அர்ப்பணிக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை சேர்த்துள்ளார் வார்னர். இதற்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இரட்டை சதமடித்து முதல் வீரராக உள்ளார்.
100 டெஸ்ட்களில் 3ஆவது இரட்டை சதம்!
100 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர், தன்னுடைய 3ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய அதிகபட்ச ரன்கள் 335 ரன்கள் ஆகும்.
விராட் கோலிக்கு பிறகு அதிக சதமடித்த வீரராக மாறிய வார்னர்!
தனது 45ஆவது சதத்தை விளாசியிருக்கும் டேவிட் வார்னர், தற்போது விளையாடி வரும் வீரர்களில் 72 சதங்களை அடித்து முதலிடத்தில் இருக்கும் விராட்கோலிக்கு பிறகு இரண்டாவது இடத்திற்க்கு முன்னேறி உள்ளார் வார்னர். 44 சதங்களை அடித்து இரண்டாவது இடத்தில் இருந்த ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் வார்னர்.