இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது சச்சினிடம் அனாவசியமாகப் பேச்சுக்கொடுக்க வேண்டாம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத் தனக்கு அறிவுறுத்தியதாக பிரட் லீ தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று முன் தினம் தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். சச்சின் பிறந்தநாளையொட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை நடத்தியது. அதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ கலந்துகொண்டார். அப்போது அவர் சச்சின் உடன் விளையாடிய நாள்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கிளன் மெக்ராத் தனக்கு கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்தார் " ஆஸ்திரேலிய அணியில் நான் நுழைந்தபோது மெக்ராத் தான் மூத்தவர். அவர்தான் எனக்குப் பல அறிவுரைகளை வழங்குவார். எனக்கு மட்டுமல்லாமல் மிட்சல் ஜான்சனுக்கும் அவர்தான் குரு. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் பவுலர்கள் தனியாக ஒரு மீட்டிங் போடுவோம், அப்போது யூகங்களை வகுப்போம். அப்போது மெக்ராத் ஒருநாள் சொன்னார் அனாவசியமாக சச்சினை சீண்ட வேண்டாம், அவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது. அப்படி நீங்கள் சீண்டினால் அன்றைய தினம் முழுவதும் நீங்கள் வலியால் துடிப்பீர்கள், அந்த நாளை மறக்க முடியாத அளவுக்குச் செய்துவிடுவார்" என எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டக் கூறும்போது "1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை முதல் முதலாக சீண்டினேன், வெறுப்பேற்றினேன். போட்டியின் நாள் முடிவில் என்னிடம் வந்த சச்சின் "நான் உங்களிடம் தவறாக நடந்துகொள்ளவில்லையே பின்பு ஏன் என்னிடம் அவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்" எனக் கேட்டார். அப்போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை தர்மசங்கடமாக உணர்ந்தேன்" என்றார் அவர்.