கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளை பறிக்கக்கூடிய ஒரு வீரர் மீண்டும் வரலாம் என்று கசமிஞ்ஞை கொடுத்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் இப்போதில் இருந்தே அணியை கட்டமைக்கும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது பற்றிய விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளை பாதிக்கக்கூடிய ஒரு நட்சத்திர வீரர் மீண்டும் வரலாம் என்று கசமிஞ்ஞை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடையிலான போட்டி இருவருக்குமே பயனளிக்கும். இருவரில் ஒருவர்தான் உள்ளே செல்வார்கள் என்ற நிலை எழுந்தால் இருவருமே வரவிருக்கும் போட்டிகளில் நல்ல ரன்களை குவிக்க நினைப்பார்கள். அது இருவருக்குமே நல்ல விஷயம்தான். மேலும் அவர்கள் இருவரும் சிறந்த பீல்டர்கள். கே.எல்.ராகுலால் ஃபீல்டிங் மூலம் விக்கெட்டுகளை எடுக்க முடியும். எனவே, 5 மற்றும் 6-வது இடங்களுக்கு இதுபோன்ற போட்டிகள் நடைபெறுவது ஆரோக்கியமானதுதான். ஆனால், ஹர்திக் பாண்டியா விரைவில் ஒரு நாள் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்திய அணியின் தவிர்க்கமுடியாத ஆல்-ரவுண்டராக உருவாகியுள்ள ஹர்திக் ஓய்வு முடிந்து திரும்பினால் அது இந்த இருவரில் ஒருவரை வெளியில் அமரவைக்க வேண்டிய நிலையை உருவாக்கும்'' என்றார்.