கோலியை எல்லாம் சச்சினோடு ஒப்பிடாதீர்கள்? -கம்பீர் கருத்துக்கு வச்சு செய்துவரும் ரசிகர்கள்!

கோலியை எல்லாம் சச்சினோடு ஒப்பிடாதீர்கள்? -கம்பீர் கருத்துக்கு வச்சு செய்துவரும் ரசிகர்கள்!
கோலியை எல்லாம் சச்சினோடு ஒப்பிடாதீர்கள்? -கம்பீர் கருத்துக்கு வச்சு செய்துவரும் ரசிகர்கள்!
Published on

விராட் கோலி செய்திருப்பது அற்புதமான சாதனைதான், ஆனால் அதற்காகவெல்லாம் கோலியை சச்சினோடு ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில், பர்சபரா மைதானத்தில் நடைபெற்றது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்குமென்று கணிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஓபனர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நல்ல தொடக்கத்தை அமைத்துகொடுத்தனர். பின்னர் 3ஆவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன்னுடைய 73ஆவது சர்வதேச சதத்தை பதிவு செய்தார். 12 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசிய கோலி 87 பந்துகளில் 113 ரன்களை குவித்து, ஒருநாள் போட்டிகளில் தனது 45ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக சதத்தை பதிவு செய்திருந்த விராட் கோலி, 2022ஆம் ஆண்டின் கடைசி போட்டியில் தான் 3 வருடங்களுக்கு பிறகு தனது 44ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்திருந்தார். சமீப காலமாக தனது பேட்டிங்க் பார்மில் சொதப்பி கொண்டிருந்த விராட் கோலி 2022ன் கடைசி போட்டியிலும், 2023ன் முதல் போட்டியிலும் என தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்து, தனது பழைய பார்மை மீட்டெடுத்துள்ளார். இந்த சதத்தை பதிவுசெய்ததின் மூலம் ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார், இதனை விராட் கோலி மற்றும் இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சொந்த மண்ணில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்!

இந்தியாவில் மட்டும் 99 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் விராட் கோலி 20 ஒருநாள் போட்டி சதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம், இதற்கு முன்னர் 160 இன்னிங்ஸ்களில் 20 சதங்களை பதிவுசெய்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட்கோலி. தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக சதங்களை அடித்தவர்களில் மட்டுமல்லாமல், காலத்திற்குமான பட்டியலிலும் இன்னும் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் தான் பின்னுருக்கிறார் கோலி. விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த வரிசையில் ஹசிம் அம்லா 69 இன்னிங்ஸ்களில் 14 சதங்கள் மற்றும் 151 இன்னிங்ஸ்களில் 14 சதங்களுடன் ரிக்கிபாண்டிங் ஆகியோர் உள்ளனர். மாடர் டே கிரிக்கெட்டில் விராட் கோலியை பின் தொடரும் வீரர்கள் யாருமே இல்லை.

சச்சின் ஒருநாள் சதங்கள் 49 - விராட் கோலி ஒருநாள் சதங்கள் 45!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 45ஆவது சதத்தை பதிவுசெய்துள்ளார் விராட்கோலி. 257 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் விராட்கோலி இவ்வளவு சதங்களை விரைவாக அடித்த முதல்வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்களை அடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் அதிக ஒருநாள் சதங்கள் அடித்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். சச்சினை பின்னுக்கு தள்ள இன்னும் விராட்கோலிக்கு 5 சதங்கள் மட்டுமே மீதமுள்ளன.

ஒரு எதிரணியோடு அதிக சதங்களை அடித்த வீரர்!

இலங்கை அணிக்கு எதிராக மட்டும் இந்தியாவின் ரன் மெஷின், நேற்றைய போட்டியின் சதத்தையும் சேர்த்து 9 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிக சதங்கள் என்றால் அது 9 சதங்கள் தான், இந்த சதத்தை முதலில் எட்டியவர் சச்சின் டெண்டுல்கர் தான் என்றாலும், இரண்டு அணிகளுக்கு எதிராக செய்த ஒரே வீரர் விராட் கோலி தான் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராகவும் 9 சதங்களை அடித்திருக்கிறார் கோலி. சச்சின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 9 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் குறைவான இன்னிங்ஸ்களிலேயே 45 சதங்களை அடித்துவிட்டதால், விரைவாகவே சச்சினின் 49 சதங்களை ஒருநாள் போட்டிகளில் முந்திவிடுவார் என்று சச்சினோடு ஒப்பிட்டு சொல்லப்பட்டு வருகிறது. பெரும்பாலானோரின் இந்த கருத்திற்கு, “எப்படி சச்சினோடு விராட்கோலியை ஒப்பிட்டு பேசுவீர்கள்” என்ற மாற்று கருத்தை கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.

இதுகுறித்து பேசியிருக்கும் இந்திய முன்னாள் வீரர் கம்பீர். “ குறைவான இன்னிங்ஸ்களில் அதிக சதங்களை விராட் கோலி அடித்திருப்பது சாதனை தான். ஆனால் நீங்கள் கோலியை சச்சினுடன் எப்படி ஒப்பிட முடியும். சச்சின் விளையாடிய காலத்தில் 30யார்டு வட்டத்திற்குள் 5 வீரர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற ரூல்ஸ் இல்லை. பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் தற்போதையை நிலை சச்சின் விளையாடிய காலகட்டத்தில் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “ இது மிகவும் சாதாரண பந்துவீச்சு. இந்திய பேட்டிங்கை பொறுத்த வரையில் முதல் மூன்று பேர்களும் நிறைய ரன்களை எடுத்துள்ளனர். ஓபனாக சொல்லவேண்டும் என்றால் விராட்கோலிக்கு இவ்வளவு ரன்களை எடுக்கும் திறன் உள்ளது. ஆனால் ரோகித் மற்றும் சுப்மன் கில் இருவரும் எளிதாக ரன்களை எடுத்தது, எனக்கு சர்ப்ரைஸ்ஸாக இருந்தது. இலங்கையின் பந்துவீச்சு எனக்கு மோசமாக இருந்தது ஏமாற்றத்தை அளித்தது" என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கம்பீரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விராட் கோலியின் ரசிகர்கள், கவுதம் கம்பீருக்கு விராட் கோலி மேல் பொறாமை என்றும், அதனால் தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளர் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com