“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
Published on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆரம்பித்த 2 நாட்களுக்குள் இரு அணிகளும் ஆல் அவுட்டாகி உள்ளன. இதுவரை மொத்தமாக 30 விக்கெட்டுகள் இந்த ஆட்டத்தில் வீழ்ந்துள்ளன. அதில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது சுழற்பந்து வீச்சாளர்கள் தான். இந்தியா இந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட வேண்டி உள்ளது. அதில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. இது கிரிக்கெட் ஆர்வலர்களை புருவம் தூக்க செய்துள்ளது. அவர்களது கோவத்திற்கும் ஒரு நியாயமான காரணம் உள்ளது. 

வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ஹோஸ்ட் செய்யும் நாடுகள் அவர்களுக்கு உதவுகின்ற வகையில் ஆடுகளத்தை கட்டமைப்பார்கள். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் பந்து எழும்பி (பவுன்ஸ்) வரும் வகையிலும், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் பந்து ஸ்விங்காகும் வகையிலும், இந்தியா மாதிரியான நாடுகளில் சுழலுக்கும் ஏற்ற வகையில் ஆடுகளம் கட்டமைக்கப்படும். இது நீண்ட நெடும் காலமாக இருந்து வருகின்ற வழக்கம் தான். அதனால் தான் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் ஆடுகளத்தை குறை சொன்ன போதும் அதை பலரும் கண்டும் காணாமல் இருந்தனர். ஆனால் அகமதாபாத் மைதானத்தின் கதை வேறாக உள்ளது. 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் வரிசையாக ட்வீட் போட்டு இந்த ஆடுகளத்தை விமர்சித்து வருகிறார். “இந்த ஆடுகளம் மூன்று நாட்கள் மட்டுமே ஒரு டெஸ்ட் போட்டி நடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து நாட்கள் எல்லாம் விளையாட வாய்ப்பே இல்லை. அதோடு வேடிக்கை என்னவென்றால் இங்கிலாந்து ஸ்பின்னர்களின் பந்துவீச்சை இந்திய வீரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை” என சொல்லியிருந்தார்.

அதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வாகனுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். ‘இந்தியாவில் தங்களது பேட்டிங் ரெக்கார்ட் என்ன?, ஆடத் தெரியாதவங்க பிட்ச் சரியில்லைன்னு சொல்றாங்க, இங்கிலாந்து வீரர்களால் 20 பந்து கூட மோடி மைதானத்தில் விளையாட முடியாது’ என்றெல்லாம் தெரிவித்துள்ளனர். 

“110 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்து ஸ்டேடியம் கட்ட தெரிந்தவர்களுக்கு, ஆடுகளம் அமைக்க 50 சென்ட் காசு கூட செலவு செய்தது போல தெரியவில்லை. இந்த களத்தில் பேட்டிங் செய்வதெல்லாம் லாட்டரி வெல்வதை போன்றது” என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் ஹுயூக்ஸ். 

“இந்த பிட்ச் மோசமானதாக காணப்படுகிறது. ஆனால் அதைவிட மோசமாக உள்ளது ஆடும் பேட்ஸ்மேன்களின் ஆட்டம்” என இந்திய பத்திரிகையாளர் சம்பித் பால் தெரிவித்துள்ளார்.

“இந்த பிட்ச் மிகவும் அற்புதமான ஆடுகளம். எப்போ ஜோ ரூட்டால் 5 விக்கெட்  முடிகிறதோ அப்போதே அது தெரிந்துவிட்டது” என ரசிகர் ஒருவர் தெரிவித்த்துள்ளார்.

இப்படி இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து பலரும் பலவிதமாக கேள்வி எழுப்பியுள்ளனர். டெஸ்ட் தொடரை நடத்தும் அணிகளுக்கு சாதகமாக ஆடுகளங்களை அமைப்பதில் தவறேதும் இல்லை. இருந்தாலும் இப்படி செய்வது சரியில்லை எனவும் சிலர் தெரிவித்துள்ளனர். 

மோசமான ஆடுகளத்தினால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சில கைவிடப்பட்டுள்ளன. 1998இல் ஜமைக்காவில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆடுகளத்தின் மோசமான தன்மையினால் கைவிடப்பட்டுள்ளது. அதே போல கடந்த 2009இல் டெல்லியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கணிக்க கூட முடியாத அளவிற்கு பந்து பவுன்ஸ் ஆவதற்கு ஆடுகளத்தின் மோசமான தன்மையே காரணம் என சொல்லி அந்த போட்டி கைவிடப்பட்டது. 

அதே போல மற்ற நாடுகளிலும் மோசமான பிட்ச்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு புகார் பரந்துள்ளன. அப்படி புகார் பறந்த பிறகு அந்த ஆடுகளங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளத்தில் இதுமாதிரியான அக்கறைகளை ஐசிசி காட்ட வேண்டுமென்பதே மெய்யான கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. அதே நேரத்தில் அவசரகதியில் இந்த மைதானத்தை இந்த தொடருக்காக தயார்படுத்தியதே இதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறிது.

-எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com