கடைசி ஓவரில் DK சிக்ஸர் மழை! 3 விக்கெட் வீழ்த்தி புவனேஷ்வர் அபாரம்! வெற்றி பெறுமா இந்தியா?

கடைசி ஓவரில் DK சிக்ஸர் மழை! 3 விக்கெட் வீழ்த்தி புவனேஷ்வர் அபாரம்! வெற்றி பெறுமா இந்தியா?
கடைசி ஓவரில் DK சிக்ஸர் மழை! 3 விக்கெட் வீழ்த்தி புவனேஷ்வர் அபாரம்! வெற்றி பெறுமா இந்தியா?
Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஓப்பனர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ரபாடாவின் பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் ஒரு ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆட, இஷான் கிஷன் பொறுப்புணர்ந்து அதிரடியாக விளையாடி பந்துகளை நாலாப்புறமும் சிதறவிட்டார். நோர்க்கியா வீசிய 4வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார் இஷான். பர்னெல் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரியை இஷான் விளாச ஸ்கோர் உயரத் துவங்கியது.

ப்ரெட்டோரியஸ் வீசிய 6வது ஓவரிலும் இஷான் சிக்ஸர் ஒன்றை சிதறடிக்க, பவர்பிளே முடிவில் 42-1 என்ற நிலையில் வலுவாக இருந்தது இந்திய அணி. ஆனால் நோர்க்கியா வீசிய 7வது ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய இஷான், அதற்கு அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து 34 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாயதால், ஸ்கோர் மந்தமாக உயரத் துவங்கியது. சம்சி வீசிய ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அதிரடிக்கு திரும்பும் வேளையில் பொறுப்பற்ற ஷாட் ஒன்றை ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார் பண்ட். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆட, ஸ்ரேயாஸ் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டி ஸ்கோரை உயர்த்தி வந்தார்.

ஆனால் பர்னெல் பந்துவீச்சில் ஹர்திக் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அவரை பின் தொடர்ந்து ஸ்ரேயாஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரெட்டோரியஸ் பந்துவீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். டெத் ஓவர்களில் இணை சேர்ந்த தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல் இருவரும் பொறுப்பாக விளையாடினர்.

ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி நிதானமாக ஆடிவந்த தினேஷ், ப்ரெட்டோரியஸ் வீசிய இறுதி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது. 149 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கு நிகழ்ந்த அதே முதல் ஓவர் அதிர்ச்சி காத்திருந்தது.

புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் ஹெண்ட்ரிக்ஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து களத்திற்கு வந்த ப்ரெட்டோரியஸ் வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறிய நிலையில் அடுத்து வந்த வான் டர் டஸனும் புவனேஷ்வர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேற தென்னாப்பிரிக்க அணி தள்ளாடி வருகிறது. தற்போது 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்க அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com