ஐபிஎல் உரிமையாளருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இருவேறு கருத்துக்கள் உள்ளதால் இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு முடிவு மேற்கொள்ள பிசிசிஐ திட்டம்.
ஐபிஎல் தொடரில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலமும் ஆண்டுதோறும் மினி ஏலமும் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியுள்ளதால் மெகா ஏலம் ஏன் நடத்த வேண்டும் என்ற குரல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மெகா ஏலத்திற்கு முன்பு 3 வீரர்களை மட்டுமே தக்க வைக்க அனுமதி வழங்கப்படுவது காரணமாக பலம் வாய்ந்த அணிகள் பலமிழக்கும் நிலை உள்ளதால் இந்த குரல் அதிகரித்து வருகிறது.
எனவே, இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைக்க அனுமதி வழங்குவது அல்லது எத்தனை RTM கார்டு வழங்குவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது.
2.30 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா மற்றும் சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர்கள் மெகா ஏலத்தை இனி நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவியா மாறன், “ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 6 வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதி வழங்க வேண்டும். அந்த அணி வெளிநாட்டு வீரர்கள் அல்லது இந்திய வீரர்கள் என யாரை வேண்டும் என்றாலும் தக்க வைத்து கொள்ளலாம். அதற்கு விதிமுறை விதிக்க கூடாது. காரணம் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு முறையில் அணியை கட்டமைப்பு மேற்கொள்வார்கள். எனவே குறைந்தபட்சம் 6 வீரர்களை எப்படி வேண்டும் என்றாலும் தக்க வைக்க அனுமதி வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ஒருவருடன் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளில் 6 அணிகள் சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் ஆகிய அணிகள் தற்போது மெகா ஏலம் நடத்த வேண்டாம். இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இப்படி ஒரு புறம் மெகா ஏலம் வேண்டாம் என ஒரு தரப்பு கூற பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகள் மெகா ஏலம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அணியின் உரிமையாளர்கள் கருத்தை கேட்ட பிசிசிஐ இந்த மாதம் இறுதிக்குள் ஒரு முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பிசிசிஐ 4 +1+1 என்ற முறையை கடைபிடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது ஒரு அணி 4 வீரர்களை தக்க வைக்கவும், ஒரு இளம் இந்திய வீரர் அதாவது அவர் இந்தியாவிற்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க கூடாது. அப்படி ஒரு வீரரரை தக்க வைக்கவும் கூடுதலாக ஏலத்தின் போது RTM கார்டு மூலம் ஒரு வீரரை தக்க வைக்கவும் அனுமதி வழங்கலாம் என முதற்கட்ட முடிவில் உள்ளதாகவும் இருப்பினும் இறுதி முடிவு ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் மட்டுமே எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.