2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று ஜிம்னாஸ்டிக்கின் வால்ட் பிரிவில் 4 ஆம் இடம் பிடித்தார். அதன் பின்பு கடும் முதுகுவலி, காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த தீபா, கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க விரும்பினார். ஆனால் தொடர் சிகிச்சை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை.
இப்போது இரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதிப்பட்டு மீண்ட நிலையில் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பையில் இந்தியாவின் தீபா கர்மாகர் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். துருக்கி, மொ்ஸின் நகரில் எப்ஐஜி ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை சேலஞ்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வால்ட் பிரிவில் 14.150 புள்ளிகள் குவித்து இந்தியாவின் தீபா கர்மாகர் தங்கம் வென்றார். மேலும் அவா் 13.400 புள்ளிகளுடன் தகுதிப் பிரிவிலும் முதலிடம் பெற்றார். மேலும் அவர் ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பங்கேற்க உள்ள 10 பேர் கொண்ட இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், "தீபா கர்மாகரால் இந்தியா பெருமையடைகிறது. துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தீபாவுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவருடைய விடா முயற்சிக்கான பெருமைமிகு உதாரணம்' என்று பதிவிட்டுள்ளார்.