பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற 42 வயதான குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, குத்துச்சண்டையை பிரபலமடைய செய்த சிறந்த விளையாட்டு நட்சத்திரம் என்றும், டிங்கோவின் மறைவை கேட்டு துயருற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரை சேர்ந்த டிங்கோ சிங், 1998ஆம் ஆண்டு பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர். அவரது அளப்பரிய சாதனைக்காக 1998ஆம் ஆண்டு அர்ஜூனா விருதும், 2013ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
இந்திய கடற்படையிலும் டிங்கோ சிங் பணிபுரிந்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார்.