அணி நெருக்கடியாக இருக்கும்போது, அதிரடியாக விளையாடி, வெற்றி பெற வைப்பதை அதிகம் விரும்புகிறேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு அணி, தொடர்ந்து 9 வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது. அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்கால் அணிக்கு எதிராக 62 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக், மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 65 ரன்கள் குவித்து மிரட்டினார்.
உலகக் கோப்பை டி-20 நெருங்கி வரும் நிலையில் அவரது அதிரடி ஆட்டம் கவனிக்க வைத்துள்ளது. இதுபற்றி தினேஷ் கார்த்திக் கூறும்போது, ’’ கடைசி கட்டத்தில் சில ஓவர்களே மீதமிருக்கும்போது இப்படி ரன்குவிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் நான்கு வரிசைகளில் இறங்கி பேட் செய்து அதிக ரன்கள் குவிப்பது எளிதானது என்று எனக்குத் தெரியும். ஆனால், அணி அழுத்தத்தில் இருக்கும் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எம்.எஸ்.தோனி, இந்திய அணிக்காக, பலவருடங்கள் இதை செய்திருக்கிறார். அவரையே நானும் பின்பற்றுகிறேன். ஆசிய கோப்பை போட்டியின் போதும் சமீபத்திய டி-20 தொடர்களிலும் நான் அப்படியே ஆடி வந்திருக்கிறேன். சிறந்த ஃபினிஷர் என்று சொல்லப்படுவதில் எனக்கு மகிழ்ச்சிதான். அதை எனது பலமாகவே கருதுகிறேன். தமிழ்நாடு அணியில் ஷாரூக்கான் சிறப்பாக பேட் செய்து வருகிறார். அவர் அதிரடி ஆட்டக்காரர்’ என்றார்.