நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் சென்னை பேட் செய்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டூ பிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இந்த சீசனில் இருவரும் 756 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இணைந்து சேர்த்த அதிகபட்ச ரன்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளனர். கோலி-டிவில்லியர்ஸ் மற்றும் வார்னர்-பேர்ஸ்டோ முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
டூ பிளசிஸ் இந்த இறுதிப் போட்டியில் அரை சதம் கடந்துள்ளார். கொல்கத்தா வீரர் ஷகிப்-அல்-ஹசன் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் டூ பிளசிஸ் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை அந்த அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வீணடித்தார். அப்போது 2 ரன்கள் மட்டுமே டூ பிளசிஸ் எடுத்திருந்தார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி சென்னை அணியின் ஸ்கோர் போர்டை வேகமாக கூட்டி வருகிறார் அவர். தற்போது வரை அவர் 49 பந்துகளில் 68 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை அணி 16 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.