தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வேல் அதிரடி அரைசதம்! டெல்லிக்கு 190 ரன்கள் இலக்கு

தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வேல் அதிரடி அரைசதம்! டெல்லிக்கு 190 ரன்கள் இலக்கு
தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வேல் அதிரடி அரைசதம்! டெல்லிக்கு 190 ரன்கள் இலக்கு
Published on

தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 190 ரன்களைக் குவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ.

ஐபிஎல் 2022 தொடரில் இன்றைய 2வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ, டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னைக்கு எதிராக பெற்ற தோல்வியிலிருந்து மீண்டெழும் முனைப்பில் ஆர்சிபி அணியும், வெற்றிப் பயணத்தை தொடரும் உத்வேகத்திலும் டெல்லி அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

ஆர்சிபியின் ஓப்பனர்களாக ஃபாப் டு பிளசிஸ், அனுஜ் ராவத் ஆகியோருக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ராவத் எல்பிடபுள்யூ முறையில் கோல்டன் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார். கேப்டனாக பொறுப்பாக டு பிளசிஸ் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் அவுட்டாக 13-2 என்ற நிலையில் ஆர்சிபி தள்ளாடத் துவங்கியது.

கோலியாவது நிலைத்து நிற்பார் என எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த க்ளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட ஸ்கோர் மெல்ல உயரத் துவங்கியது. ஒருபக்கம் மேக்ஸ்வேல் பவுண்டரி மழை பொழிய, மறுபக்கம் பிரபுதேசாய் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இருப்பினும் டெல்லி பவுலர்களை வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் அரைசதம் கடந்தார்.

34 பந்துகளில் 55 ரன்கள் குவித்த நிலையில் மேக்ஸ்வெல் அவுட்டாக ஆர்சிபி மீண்டும் பழைய தள்ளாட்ட நிலைக்கு திரும்பியது. அடுத்து வந்த ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் பொறுமையாக விளையாடினர். ஏதுவான பந்துகளை மட்டுமே எல்லைக் கோட்டுக்கு விரட்டி விளையாடியது இந்த கூட்டணி. முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய 18வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி ஆச்சர்யமளித்தார்.

28 பந்துகளில் அரைசதம் கண்ட தினேஷ் கார்த்திக், தொடந்து அதிரடியாக விளையாடி அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ. தினேஷ் கார்த்திக் 34 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசி 66* ரன்கள் குவித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் 140 ரன்களுக்குள் அமுங்கிவிடும் நிலையில் இருந்த அணியை, தனியாளாக தாங்கி 189 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்ட வைத்துள்ளார் தினேஷ் கார்த்திக். தற்போது 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது டெல்லி கேப்பிடல்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com