சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பதே கனவு என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷிடம் சென்றுக் கொண்டிருந்த வெற்றியை தடுத்து நிறுத்தி இந்திய அணிக்கு கோப்பையை பெறுவதற்கு காரணமாகத் திகழந்தவர் தினேஷ் கார்த்தி. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், “என்னைப் போன்ற ஒரு கிரிக்கெட் வீரருக்கு அனைத்து போட்டிகளுமே முக்கியமானவை தான். இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு சக வீரர்கள் மத்தியில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது. எனவே வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே அனைவரும் முயற்சிக்கிறார்கள். அதையே நானும் செய்கிறேன். இந்தியாவில் திறமையாக விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் தான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளோம். டி20 போட்டி தரவரிசையில் முதல் 3 இடத்திற்குள் இருக்கின்றோம்.” என்றார்.
இதைத்தொடர்ந்து ஐபிஎல் குறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டியை பொறுத்தவரையில், கொல்கத்தாவின் அணியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை மாற்றங்களையே முதலில் செய்வேன். அதன்பிறகு ஐபிஎல் போட்டியின் கால் இறுதிக்கு தேர்வாக வேண்டும். பின்னர் தான் கோப்பையை வெல்வது குறித்து சிந்திக்க முடியும். இதற்கிடையே கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வேண்டும் என்பது தான் எனது கனவு. நீண்ட நாட்களாக முயற்சித்தும், சென்னை போன்ற ஒரு அற்புதமான அணியில் என்னால் விளையாட முடியவில்லை. ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்கு யார் விளையாட வேண்டும் என்பதை தீர்மானிப்பது யார் கையிலும் இல்லை. அது ஏலத்தின் கையில் தான் உள்ளது. அதனால் தான் வேறு சொந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வேறு மாநிலத்திற்காக விளையாடுகின்றனர். அது தான் ஐபிஎல் விளையாட்டின் அழகும் கூட. ஐபிஎல் என்பது அனைவருக்கும் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கின்றது” என்றார்.