ஹாக்கி வரலாற்றில் தனி முத்திரை - யார் இந்த தயான் சந்த்? 

ஹாக்கி வரலாற்றில் தனி முத்திரை - யார் இந்த தயான் சந்த்? 
ஹாக்கி வரலாற்றில் தனி முத்திரை - யார் இந்த தயான் சந்த்? 
Published on

அசாத்தியமான திறமையால் ஹாக்கி வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தயான் சந்த். அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக இந்தியா கொண்டாடுகிறது. யார் இந்த தயான் சந்த்?

இன்றைக்கு தேசிய விளையாட்டு தினம். தியான் சந்த் எனும் மாயஜால மாந்த்ரீகனின் பிறந்தநாள் இன்று. இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. அந்த எளிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒரு ஹாக்கி போட்டியை பார்க்கப்போனான். போட்டியில் ஆங்கிலேயர்கள் ஆதரித்த அணிக்கு எதிரான அணியை அவன் உற்சாகப்படுத்த ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ  வேண்டுமானால் இறங்கி ஆடேன் என்று நக்கலாக சொல்ல அந்தப் போட்டியில் அவன் அடித்த கோல்கள் நான்கு.

 மிகப்பெரிய மின் விளக்குகள் இல்லாத காலத்தில் நிலவொளியில் பயிற்சி செய்யும் பழக்கம் சந்துக்கு உண்டு. அதனாலேயே அவர் சந்த் என அழைக்கப்பட்டார் என்பார்கள். 

நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக இந்திய அணி ஒன்று தேர்வானது. அதில் இவரும் இடம் பெற்றார். எண்ணற்ற போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி கலக்கி எடுத்தது. மொத்தம் 192 கோல்களை இந்திய அணி அடித்தது. அந்த கோல்களில் நூறு கோல்கள் சந்த் அடித்தது. ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற எல்லா போட்டியிலும் (பதினெட்டு ) வென்றிருந்தது. அப்பொழுது இரண்டு பெண்கள் இவருக்கு ரசிகையாகி தொடர்ந்து வந்திருக்கிறார்கள். டான் பிராட்மன் இவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போல இவர் கோல் அடிக்கிறார் என்று வியந்திருக்கிறார். 

இங்கிலாந்து அணி தான் அதற்கு முந்தைய ஒலிம்பிக்கில் சாம்பியன். இந்திய அணி இங்கிலாந்தில் போய் கலந்து கொண்ட பதினொரு போட்டியிலும் வென்று விடவே ஒலிம்பிக் போட்டிக்கு இங்கிலாந்து அணிக்கு பதிலாக இந்தியா போனது. இறுதிப்போட்டிக்கு முந்தைய எல்லா போட்டிகளிலும் வென்றிருந்த இந்திய அணி மொத்தம் 26 கோல்கள் அடித்தது. அதில் பதினொரு கோல்கள் நம் நாயகன் அடித்தது. இறுதிப்போட்டி ஹாலந்து நாட்டின் தலைநகரில் ஹாலந்து அணிக்கு எதிராக நடந்தது. சொந்த ஊர் உற்சாகத்தோடு ஆடிய அந்த அணியை மூன்றுக்கு பூஜ்யம் என்று இந்தியா வென்று முதல் தங்கத்தை பெற்றது. 

தியான் சந்த் அடித்தது இரண்டு கோல்கள். ஒரு சுவாரசியமான விஷயம் போகிற பொழுது வழியனுப்ப வெறும் மூன்றே பெயர்கள் தான் இருந்தார்கள். வருகிற பொழுது பம்பாய் நகரே மக்களால் நிரம்பி இருந்தது. 

அடுத்த ஒலிம்பிக்கிலும் அப்படியே கலக்கி எடுத்தது இந்திய அணி. இறுதிப்போட்டியில் அமெரிக்காவை கதற விட்டார்கள். இருபத்தி நான்கு கோல்கள் அடித்தது இந்திய அணி அவர்களோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தார்கள். இதில் சந்த் ஒரு எட்டு கோல்கள்,அவரின் தம்பி ஒரு பத்து கோல்கள் அடித்தார்கள். இங்கிலாந்து அரசி ஒரு முறை இவரிடம் அவரின் குடையை கொடுத்து விளையாட சொல்ல அதிலும் கோல் அடித்திருக்கிறார் இவர். 

பெர்லின் ஒலிம்பிக் ஆரம்பித்த பொழுது 31 வயது அவருக்கு. தோல்வி என்பது என்னவென்றே தெரியாத இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தோற்றிருந்தது. ஒழுங்கான ஆடைகள் இல்லாமல்,மூன்றாம் கம்பார்ட்மென்ட்களில் வந்து இறங்கிய களைப்பு தீருவதற்குள் ஜெர்மனியை பயிற்சி போட்டியில் எதிர்கொண்டார்கள். 4-1 என்று இந்திய அணி தோற்றது. என்றாலும் ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக ஆடி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

பெர்லின் நகரில் இறுதிப்போட்டி. ஹிட்லர் அமர்ந்து இருந்தார். ஜெர்மனி ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது. இந்திய அணியினர் காங்கிரஸ் கொடியை வணங்கிவிட்டு களம் புகுந்தார்கள். முதல் பாதியில் இந்திய அணி ஒரே ஒரு கோல்தான் அடித்து இருந்தது. தியான் சந்த் ஸ்பைக் ஷூவை கழற்றி எறிந்தார். வெறுங்காலோடு களம் புகுந்தார். ஆர்ப்பரிப்பு ,வியர்வை எல்லாமும் வழிய அவர் அங்கே மாயஜாலம் செய்தார். மூன்று கோல்களை அவர் அடிக்க இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தை பெற்றது. 

தியான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார். வறுமை வாட்டிகொண்டு இருந்த பொழுது வேட்டை,மீன் பிடித்தல் ஆகியனவே அவருக்கு இருந்த பொழுது போக்கு. அவர் மரணமடைந்த பொழுது யாரும் கண்டுகொள்ள இல்லாமல் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். 

அதற்கு அடுத்த வருடம் அஞ்சல் தலையை மறக்காமல் வெளியிட்டோம். அவரின் பிள்ளை ஆக்லாந்து நகருக்கு வெகுகாலம் கழிந்து போன பொழுது ஐம்பதாண்டுகள் கடந்தும் தியான் சந்த் பிரமிக்க வைத்த இடங்களில் அவரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. அவர் தான் தயான் சந்த்.

- பூ.கொ.சரவணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com