நடிகர் விக்ரமிற்கு அவரது மகன் துருவ் உணர்ச்சிகரமான ஒரு பதிவை இன்ஸ்டா பக்கத்தில் எழுதியுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘அர்ஜுன் ரெட்டி’. இதை தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தனர். விக்ரம் மகன் துருவ் ஹீரோவாகவும் பனித்த சந்து, பிரியா ஆனந்த் நாயகிகளாகவும் நடித்திருந்தனர். முதலில் பாலா இயக்கத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்ட போது அதற்கு ‘வர்மா’என்று டைட்டில் வைக்கப்பட்டது.
ஆனால் இடையில் சில சிக்கல்கள் ஏற்பட இந்தப் படத்தை விட்டு பாலா விலகினார். அதன் பிறகு இதனை இயக்குநர் கிரிசாயா இயக்கினார். பல கட்ட தடைகளுக்குப் பிறகு இந்தப் படம் திரைக்கு வந்தது. ஆனால் வெளியான படத்திற்கும் துருவின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. பலரும் துருவை அறிமுக நடிகர் என்பதை தாண்டி சிறப்பாக நடித்துள்ளதாகப் பாராட்டினர்.
இந்நிலையில் நடிகர் துருவ், அவரது இன்ஸ்டா பக்கத்தில் தந்தை விக்ரமிற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் இன்று என்னால் உரையாற்ற முடிந்துள்ளது. இது ஒரு மனிதனின் அயராத உழைப்பு. எல்லா இடையூறுகளுக்கும் எதிராக இந்தப் படத்தை எப்படியாவது தயாரித்துவிட வேண்டும் என்ற மனக்கவலை இருந்தது. ஒரு பெரிய படத்தின் மீதிருந்த நம்பிக்கையை நான் இழந்தபோது கூட, அவர் எனக்கு ஒரு வழியைக் காண்பிப்பதற்காக முயன்றார். வாழ்க்கை என்பது உன்னை சந்தேகிக்க வைக்கும் என்பதை எனக்குக் காட்டவும், அது உன்னை விளிம்பிற்குத் தள்ளினாலும் இறுதியில் எதுவும் சாத்தியமாகும் ஆகவே நீ முன்னோக்கி வேலை செய்ய முடிவு செய்தால், திரும்பிப் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ‘அதித்ய வர்மா’விற்கு முழுக்க முழுக்க அப்பாவே காரணம் எனக் கூறியுள்ளார்.
மேலும் “ஆதித்ய வர்மா ஒரு ரீமேக்காக இருந்திருக்கலாம். ஆனால் இது என் இதயத்திற்கு மிக நெருக்கமான படமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்தப் படம்தான் எனக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளது. உங்களுடைய வழியில் நடந்ததுதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. நீங்கள் பெரிய லெஜண்ட். என்றைக்குமே உங்கள் இடத்திற்கு வர முடியாது. ஆனால் அயராது உழைத்து உங்களை பெருமைப்படுத்துவேன். ஏனெனில் நான் ஒரு ரசிகனாக இருந்த ஒரு நபரிடமிருந்து கற்றுக் கொண்டேன். அது நீங்கள்தான். உங்கள் பார்வை இன்று என்னை இங்கே வைத்திருக்கிறது. The real chiyaan நன்றி” என்று கூறியுள்ளார்.