இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை, விராட் கோலி பாராட்டாத இடமே இருக்காது. தோனி குறித்த கேள்வி கேட்கும் போதெல்லாம் அவருக்கு ஆதரவாகவும், அவர் மீது தனக்கு இருக்கும் மரியாதை குறித்தும் எப்போதும் வெளிப்படுத்த விராட் கோலி தவறுவதே இல்லை. சமயங்களில் தன்னுடைய மூத்த சகோதரர் என்றும் தனக்கும் மற்ற வீரர்களுக்கும் வழிகாட்டி என்றும் பாராட்டுவார் கோலி.
ஆனால் தோனி மீதான இத்தனை பிணைப்பை கோலி கொண்டிருந்த அதே வேளையில், அவர்கள் இருவரது உறவும் முறிவது இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியால் தடுக்கப்பட்டிருந்த சம்பவம் நடந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
தோனிக்கும் கோலிக்கும் இடையில் நடந்த உறவு சிக்கல் குறித்து முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளரான ஆர்.கே.ஸ்ரீதர் தான் எழுதியுள்ள புத்தகத்தில் விவரமாக விவரித்திருக்கிறார்.
அந்த பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதன்படி, 2016ம் ஆண்டு நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி "Coaching Beyond - My Days with the indian cricket team" என்ற தலைப்பில் விவரித்திருப்பது புத்தகத்தின் 42வது பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.
அதில், “2016ம் ஆண்டு காலத்தின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆக வேண்டும் என விராட் கோலி மிகுந்த ஆர்வமாக இருந்தார். அதாவது White ball-ல் விளையாடும் ODI, T20 போன்ற போட்டிகளிலும் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என விராட் ஆசைப்பட்டார்.
இதுபற்றி அறிந்திருந்த ரவி சாஸ்திரி, ஒரு நாள் விராட் கோலியிடம் பேசியிருந்தார். அப்போது, “டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்சியை தோனி உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். ஆனால் சரியான நேரம் வரும் போது white ball போட்டிகளுக்கான கேப்டன்சியையும் தோனி கொடுப்பார்.
அதுவரை தோனிக்கான மரியாதையை கொடுக்காவிட்டால், நாளை நீங்கள் கேப்டனாகும் போது என்ன செய்தாலும் உங்களுக்கான மரியாதை கிடைக்காமல் போய்விடும். ஆகையால் கேப்டன்சி பொறுப்பு உங்களை தேடி வரும். அதன் பின்னால் ஓட வேண்டாம்.” என விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் செய்து தோனியுடனான உறவை தக்க வைத்திருக்கிறார்” என ஸ்ரீதரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.