'தோனி போல சிறந்த கேப்டன் இல்லை' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான எல். பாலாஜி சொன்னார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘ஓர் அணியை வழிநடத்த தோனியை விட சிறந்த வீரர் யாருமில்லை. பல பந்துவீச்சாளர்களை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பந்துவீச்சாளரையும் அவர்களது ஸ்டைலை மாற்றி பந்துவீச அவர் வற்புறுத்துவதில்லை. பந்துவீச்சாளரின் ஸ்டைலுக்கே விட்டுவிடுகிறார். தோனி, களத்தில் சுதந்தரம் கொடுப்பார். எந்த நேரத்தில் யாரை பந்துவீச செய்யலாம் என்கிற வித்தையை அறிந்தவர். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்க மாட்டார். அதையெல்லாம் விட, தோனியின் தலைமையில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.
முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறும்போது, ‘பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியவர் தோனி. மன்பரீத் கோனி, மொகித் சர்மா, சுதீப் தியாகி ஆகிய வீரர்களை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இவர்களை உருவாக்கியவர் தோனி. யாரை, எப்படி, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இவர்களைப் போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த வருடம், ஷர்துல் தாகூர், தீபர் சாஹர் ஆகியோரை சிறந்த வீரராக உருவாக்குவார்’ என்றார்.