இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோகித் 17 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். தோனி, 13 வது ஓவரில் களமிறங்கும்போது இந்திய அணி, 101 ரன்களில் இருந்தது. கே.எல். ராகுல் 48 பந்துகளில் 61 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, மனீஷ் பாண்டே வந்தார். இவரும் தோனியும் இணைந்து அடித்து ஆட முயன்றனர். ஆனால், மைதானம் ஒத்துழைக்கவில்லை. இலங்கை அணி, சிறப்பாக பந்துவீசியதால் அடித்து ஆட முடியவில்லை. 11 முதல் 16 ஓவர்கள் இடைவெளியில் இந்திய அணி, வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து அதிரடியை காட்டத் தொடங்கினார்கள் தோனியும் பாண்டேயும்.
தோனியின் டிரேட்மார்க் ஷாட்களை நேற்றுப் பார்க்க முடிந்தது. அவர், பந்துவீசிய திசையை நோக்கி, நேராக அடித்த ஒரு பந்து புல்லட் வேகத்தில் சென்றதைக் கண்டு மெய்மறந்தனர் ரசிகர்கள். அதே போல கடைசி பந்தில் தோனி அடித்த சிக்சர் அபாரம். பந்துவீசிய பெரேரா, ‘இதெப்படி?’ என்று பந்து போகும் திசையை பார்த்தே நொந்து போய்விட்டார்.
தோனியும் மனீஷ் பாண்டேவும் இணைந்து நேற்று ஆடிய விதம், ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங்கும் தோனியும் இணைந்து 256 ரன்கள் குவித்ததை ஞாபகப்படுத்தியது என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 61 ரன்களை திரட்டியது. தோனி 22 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இலங்கை அணி ஆடியபோதும் மின்னல் வேகத்தில் செயல்பட்டார் விக்கெட் கீப்பர் தோனி. சேஹல் பந்தில் இலங்கை கேப்டன் திசாரா பெரேராவை அவர் அவுட்டாக்கிய விதத்தில் பெரேராவுக்கு மீண்டும் ஷாக். ஏனென்றால் அதில் அத்தனை வேகம்!
இந்த ஆட்டத்தின் மூலம், தனக்கு எதிராக கருத்துத் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் வாயை அடைத்திருக்கிறார் ’தல’ தோனி.
’தல’ போல வருமா?