தோனி சோர்வடையவில்லை அவர் உடற்தகுதியுடன் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.
இந்நிலையில் தோனி குறித்து "ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார் அதில் "சென்னையில் ராயுடு, தோனி, முரளி விஜய் ஆகியோருடன் பயிற்சி செய்வது உற்சாகமாக இருக்கும் காலையில் 2 முதல் 4 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொள்வோம். இந்த முறை தோனி சோர்ந்துபோகவேயில்லை. காலையில் ஜிம்மில் பயிற்சியை முடித்த பின்பும் மாலையும் 3 மணி நேரத்துக்கு மேல் தோனி பயிற்சி செய்தார்" என்றார்.
இது குறித்து மேலும் தொடர்ந்த சுரேஷ் ரெய்னா "இப்படி விடாமல் பயிற்சி செய்யும்போது உடலில் ஒரு பிடிப்பு தன்மை ஏற்படும். 4 மணி நேரம் போட்டியில் சோர்வடையாமல் விளையாட 5 மணி நேர பயிற்சி தேவைப்படும். முதலில் சில நாள்கள் வெறும் உடற்பயிற்சி மட்டுமே செய்துக்கொண்டு இருந்தார். பின்பு பேட்டிங் பயிற்சியில் அவ்வளவு சிறப்பாக விளையாடினார். நல்ல உடற்தகுதியுடனுமே இருந்தார். இம்முறை பயிற்சியில் மேற்கொண்ட தோனியிடம் அப்படியொரு தெளிவைக் கண்டேன். ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கினாலும் தோனி தயாராகவே இருக்கிறார்" என்றார்