இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தோனி மிகச் சிறந்த மனித நேயர் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி புகழாரம் சூட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்பு சர்வதேசப் போட்டிகளில் ஏதும் தோனி பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் தோனியை பார்ப்பதற்கு ஆவலாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தோனி குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய பேட்டிகளை சமூக வலைத்தளம் வாயிலாகவே கொடுத்து வருகின்றனர். இப்போது ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரரும் முன்னாள் கேப்டனுமான முகமது நபி, "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழுக்கு தோனி குறித்து அளித்துள்ளப் பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் "தோனி மிகச் சிறந்த பேட்ஸ்மேன், அமைதியானவர். மிகமுக்கியமாக அவர் நல்ல மனிதர். தோனியின் அறைக் கதவுகள் 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாள்களும் எப்போதும் திறந்திருக்கும். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். தேநீர் பருகியபடியே உரையாடலாம். அவரை நான் 2 அல்லது 3 முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். உண்மையிலேயே மிகச் சிறந்த மனிதர்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.