நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் இரண்டு வார ராணுவப் பணி முடிவுக்கு வந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி. முன்னாள் கேப்டனான தோனி, ராணுவத் தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரு க்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து அவர், ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் ‘விக்டர் படை’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு பணியாற்றி வந்த அவருக்கு ஆயுதங்களைக் கையாளுவது பற்றியும் பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சியின்போது நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர் களுடன் தோனி கொண்டாடினார். ராணுவப்பணி முடிவடைந்த நிலையில், லே விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு தோனி திரும்பினார்.