2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி எடுத்த திடீர் முடிவு எப்படி சாதகமாக அமைந்தது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அந்தத் தொடரில் சிறப்பாகவே விளையாடிய இந்திய அணி அரையிறுதி வரை சென்றது. பின்பு, சிட்டினியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணிக்கு தோனியே கேப்டனாக செயல்பட்டார்.
அப்போது நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டம் குறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் ரெய்னா சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் அதில் "நான் எப்போதும் தோனியின் முடிவுகளைக் கேள்விகேட்பதில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது நான் ரிலாக்ஸ் ஆக சான்ட்விட்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 20 ஆவது ஓவரின் போது வந்த தோனி, களமிறங்கத் தயாராகும்படி கூறினார். அப்போது களத்தில் கோலி சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார். அந்நிலையில் தவான் அவுட்டானார். பின்பு நான் களமிறங்கினேன்" என்றார்.
மேலும் தொடர்ந்த ரெய்னா "கோலியுடன் களமிறங்கி 56 பந்துகளில் 74 ரன்கள் குவித்த பின்பு அவுட் ஆனேன். இந்தப் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. போட்டி முடிந்த பின்பு என்னை ஏன் முன் கூட்டியே களத்தில் இறக்கி விட்டீர்கள் எனக் கேட்டேன். அதற்கு தோனி, "லெக் ஸ்பின்னர் பந்துகளை நீ சிறப்பாக எதிர்கொள்வாய் அதனால்தான்” எனப் பதிலளித்தார்.மேலும் அந்தப் போட்டியில் என்னுடைய பேட்டிங்கை வெகுவாகவும் பாராட்டினார்" என நெகிழ்ந்துள்ளார்.