இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோனி, புவனேஷ்வர் குமாரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி போராடி வென்றது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. ஸ்ரீவர்த்தனா 58 பந்துகளில் 58 ரன்களும், கபுகேதரா 40 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மழை காரணமாக, 47 ஓவர்களில் இந்திய அணி 231 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தனர். ரோகித் ஷர்மா 54 ரன்களிலும்,
தவான் 49 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதன் பின்னர் கேதர் ஜாதவ், கேப்டன் கோலி, ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோர் அகிலா தனஞ்செயாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 8-வது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவேனேஷ்வரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவை தடுத்தனர். புவனேஷ்வர் குமார் ஒரு நாள் போட்டிகளில் முதல்
அரைசதத்தை அடித்து அசத்தினார். இந்திய அணி 45-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. புவனேஷ்வர் 53 ரன்களுடனும், தோனி 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.