“விராட் கோலியும்.. விளையாடும் பனியும்..” - அனல் பறக்கப்போகும் 5வது போட்டி..!

“விராட் கோலியும்.. விளையாடும் பனியும்..” - அனல் பறக்கப்போகும் 5வது போட்டி..!
“விராட் கோலியும்.. விளையாடும் பனியும்..” - அனல் பறக்கப்போகும் 5வது போட்டி..!
Published on

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒருநாள் போட்டியில் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்து 4 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அடுத்த நடைபெறவுள்ள 5வது போட்டி கோப்பை வெல்லும் அணியை தேர்வு செய்யும் இறுதிப் போட்டியாக மாறியுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியிடம் ஒருநாள் தொடரை பறிகொடுத்ததால், அதேபோன்று இந்தியாவை சொந்த மண்ணில் வென்று பதிலடி தர வேண்டும் என்ற தீர்மானத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. அதேசமயம் சொந்த மண்ணில் தோற்றுவிடக்கூடாது என முனைப்பில் இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தத் தொடரில் குறிப்பிட்ட பார்க்க வேண்டிய ஒரு நிகழ்வாக பனிப்பொழிவு உள்ளது. ஏனென்றால் விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த போது அளித்த பேட்டியில், தோல்விக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டு கூறியது பனிப்பொழிவு. 3 வது போட்டியின் தோல்வியின் போது பேட்டியளித்திருந்த விராட், “பனிப்பொழிவு நேரத்தில் பந்துவீசுவது கடினமாகிவிடும் என்பதால் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தோம்.

ஆனால் பனிப்பொழிவு சரியாக இல்லை” என்றார். 4வது போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர், “பனிப்பொழிவு பெரிதாக இருக்காது என நினைத்து முதல் பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் இந்தமுறையும் பனிப்பொழிவு எங்களை ஏமாற்றிவிட்டது. பனிப்பொழிவால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீச முடியவில்லை” என்றார்.

இந்த நிலையில் நாளை டெல்லி நடைபெறவுள்ள போட்டியில் வானிலை எப்படி இருக்கும் என்பது கணிக்கப்பட்டுள்ளது. போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குவதால், மாலை வரை சுமார் 25 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் மாலை நேரத்திற்கு பனிப்பொழிவும் இருக்கும் எனப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த போட்டி நடைபெற்ற மொஹாலியில் இருந்த அளவிற்கு இந்த முறை டெல்லியில் பனிப்பொழிவு இருக்காது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பனிப்பொழிவு காரணமாக இந்த முறை 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் இந்த முறையும், விராட் கோலி கணிப்பும், பனியின் விளையாட்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பனிப்பொழிவை சமாளித்து நிச்சயம் கோலி கோப்பையை கைப்பற்றுவார் எனவும் ரசிகர்கள் நம்பியுள்ளனர்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com