நான் ஒன்று நினைத்தால் விதி வேறு மாதிரி நினைக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் தவான் கூறினார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, தவான், புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது. 68 பந்துகளில் 190 ரன்கள் குவித்து தவான் ஆட்டமிழந்தார்.
சதமடித்தது பற்றி தவான் கூறும்போது, ‘இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்வு ஆகாததால் மெல்போர்ன் சென்று குடும்பத்துடன் நாட்களை செலவழிக்க நினைத்தேன். அப்படியே அடுத்து வர இருக்கிற, ஒரு நாள் போட்டிக்காக தயார்படுத்திக்கொள்ள திட்டம் வைத்திருந்தேன். ஆனால், ஹாங்காங்கில் நான் இருந்த போது எனக்கு டெஸ்ட்டில் ஆட அழைப்பு வந்தது. முரளி விஜய் காயம் காரணமாக இந்த அழைப்பு. நான் ஒன்று நினைத்தால் விதி வேறொன்றை நினைக்கிறது என்பது புரிந்தது. பிறகு இந்திய அணியில் இணைந்தேன். இன்றைய ஆட்டத்தில் (நேற்று) சதமடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இரட்டை சதத்தை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது’ என்றார்.