ரஹானே தலைமையிலான இந்திய சி அணி தியோதர் கோப்பையை கைப்பற்றியது.
தியோதர் கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் இந்திய ஏ, சி, பி அணிகள் மோதி வந்தன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய ஏ அணி தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய ‘சி’ அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ‘பி’ அணியும் மோதின.
டாஸ் வென்ற சி அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரஹானேவும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானும் அதிரடியாக விளாயாடினர். இருவரும் அபார சதமடித்தனர். இஷான் கிஷான் 87 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 144 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பி அணி சார்பில் உனட்கட் 3 விக்கெட்டுகளும் சாஹர், மார்கண்டே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய பி அணி 46.1 ஓவரில் 323 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 114 பந்துகளில் 148 ரன்கள் குவித்தும் அது வீணானது. தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 60 ரன்னும் பெய்ன்ஸ் 37 ரன்னும் எடுத்தனர். மற்றவர் கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 29 ரன் வித்தியாசத்தில் இந்திய சி அணி வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது..
சி அணி சார்பில் பப்பு ராய் 3 விக்கெட்டும் சைனி, குர்பானி, விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரஹானே ஆட்டநாயகன் விருது பெற்றார்.