ஐபிஎல்லில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா - டெல்லி அணிக்கு எழுந்த பிரச்னை

ஐபிஎல்லில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா - டெல்லி அணிக்கு எழுந்த பிரச்னை
ஐபிஎல்லில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா - டெல்லி அணிக்கு எழுந்த பிரச்னை
Published on

பெங்களூரு அணிக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளநிலையில், டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் போட்டி இந்தியாவில் முழுமையாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி அதிகளவில் செலுத்தப்பட்டதையடுத்து, கொரோனா பரவல் குறைந்தநிலையில், பார்வையாளர்கள் அனுமதியுடன் இந்தியாவில் 15-வது சீசன் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.

கொரோனா காரணமாக மற்ற மாநிலங்களில் இல்லாமல், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, நவி மும்பை, புனே ஆகிய இடங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி எங்கு நடைபெறும் என்று இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இதுவரை 24 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில், 2 வெற்றி, 2 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது. நாளை இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் 27-வது லீக் போட்டியில் டெல்லி அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை கவனமுடன் கண்காணித்து வருவதாக டெல்லி அணியின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. மற்ற விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. பயோ பபுளையும் மீறி எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இதனால் நாளை திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் போட்டியில் இவருக்குதான் முதலில் கொரோனா வந்துள்ளது.

பேட்ரிக் ஃபார்ஹார்ட் ஏற்கனவே இந்திய அணியில், கடந்த ஆகஸ்ட் மாதம் 2015-ம் ஆண்டு முதல் ஜூலை 2019-ம் ஆண்டு வரை பிசியோதெரபிஸ்ட்டாக இருந்துள்ளார். 2019 ஐசிசி உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com