இந்திய அணியுடன் இருக்க முடியாதது வருத்தமாகத்தான் இருக்கிறது என்று வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பின்பு ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார் நடராஜன். ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து பார்மெட்டுகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடராஜன் சேர்க்கப்படவில்லை. இந்தத் தொடரிலிருந்து அவருக்கு ஓய்வளித்தது பிசிசிஐ.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்த நடராஜன் "இந்திய அணியுடன் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அணியுடனே இருந்துவிட்டு இப்போது இல்லாதது கடினமாக இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் 6 மாதங்கள் இல்லாததால், இந்த ஓய்வு எனக்கு அவசியமாகிறது, அதனை நான் புரிந்துக்கொண்டேன். ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம்தான்" என்றார்.
மேலும் "நான் கிரி்க்கெட்டின் அனைத்து பார்மெட்டுகளிலும் விளையாடவே விரும்புகிறேன். இது எனக்கு எப்போதும் பிரஷராகவே இருக்காது. அதற்கு ஏற்றார்போல என்னை தயார் செய்துகொள்வேன். பொது முடக்க காலத்தில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டேன். அதுதான் என்னை ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட வைத்தது. இதை எப்போதும் செய்வேன்" என்றார் நடராஜன்.