அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு வார்னரும், பிரியம் கார்கும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.
அஷ்வின் வீசிய முதல் ஓவரில் 12 ரன்களை விளாசினர். ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் வார்னர் துரதிஷ்டவசமாக போல்டாகி வெளியேறினார். லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து வார்னரின் பேடில் பட்டு ஸ்டெம்ப் தகர்ந்தது. அதனால் மணீஷ் பாண்டே களத்துக்கு வந்தார். டெல்லி அணியின் ஸ்டாய்னிஸ் வீசிய ஐந்தாவது ஓவரில் கார்கும், பாண்டேவும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார்.
கடந்த போட்டியை போல வில்லியம்சன்னும், ஹோல்டரும் பலமான பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹோல்டர் லூஸ் ஷாட் ஆடி அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
பின்னர் களம் இறங்கிய சமாதுடன் கூட்டு சேர்ந்து வில்லியம்சன் கிளாஸான இன்னிங்ஸ் விளையாடினர். இருவரும் 57 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது ஆட்டம் டெல்லிக்கு கொஞ்சம் கிலியை கொடுத்திருக்கலாம்.
வில்லியம்சன் 45 பந்துகளில் 67 ரன்களை குவித்து ஸ்டாய்னிஸ் பந்தில் வெளியேறினார். ரபாடா வீசிய 19வது ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்தது ஹைதராபாத். இளம் வீரர் சமாத் 16 பந்துகளில் 33 ரன்களை குவித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்து வீழ்ந்தது ஹைதராபாத். 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது டெல்லி அணி.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை உடன் விளையாட உள்ளது டெல்லி அணி. 13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.