தோற்ற பெங்களூரும், வென்ற டெல்லியும் ப்ளே ஆஃப் சுற்றில்: எப்படி தெரியுமா?

தோற்ற பெங்களூரும், வென்ற டெல்லியும் ப்ளே ஆஃப் சுற்றில்: எப்படி தெரியுமா?
தோற்ற பெங்களூரும், வென்ற டெல்லியும் ப்ளே ஆஃப் சுற்றில்: எப்படி தெரியுமா?
Published on

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 55வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் இடையே அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக பிலிப்பி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். பிலிப்பி 12 ரன்களில் வெளியேற படிக்கல் தொடர்ந்து சீரான வேகத்தில் ரன் வேட்டையில் ஈடுபட்டார். அவருக்கு கேப்டன் விராட் கோலி ஒத்துழைப்பு அளித்தார். இந்த கொஞ்சம் நிதானமாகவே விளையாடியது. இறுதியில் அடித்துக் கொள்ளலாம் என நினைத்து பொறுமையாக விளையாடியிருக்கலாம்.

ஆனால், விராட் கோலி 29(24) ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த கையோடு நடையைக் கட்டினார் படிக்கல். கிறிஸ் மோரிஸும் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஏபி டிவில்லர்ஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் 150-ஐ எட்ட உதவினார். துபேவும் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி சார்பில் நோர்ட்ஜ் 3 விக்கெட் சாய்த்தார். ரபாடா 2 விக்கெட் எடுத்தார். அஸ்வின் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினாலும் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. 17.3 ஓவர்களில் டெல்லி அணி இந்த இலக்கை எட்டாமல் தடுத்துவிட்டால்,. ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற முனைப்புடன் பெங்களூர் அணி விளையாடியது.

153 ரன் என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 9 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். இருப்பினும், ஷிகார் தவான் - ரகானே ஜோடி அற்புதமாக விளையாடியது. தங்களது முழு அனுபவத்தையும் இரு வீரர்களும் களத்தில் வெளிப்படுத்தினர். நேர்த்தியான ஷாட்களை விளையாடி பவுண்டரிகளை மட்டும் விளாசினர். சிக்ஸர்களுக்கு தூக்கி அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுக்க அவர்கள் விரும்பவில்லை.

இந்த ஜோடி 88 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஆட்டம் முழுக்க முழுக்க டெல்லி கைகளுக்கு வந்து சேர்ந்தது. ஷிகர் தவான் 41 பந்துகளில் 54 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து ரகானே 46 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தாலும் குறைவான ரன்களே இருந்ததால் டெல்லி சிக்கல் இல்லாமல் வெற்றியை நோக்கி நடைபோட்டது. இறுதியில் 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி வாகை சூடியது. பண்ட் 8 ரன்களுடனும், ஸ்டொய்னிஸ் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூர் அணி தரப்பில் ஷாபத் அகமது இரண்டு விக்கெட் வீழ்த்தி அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு உதவினார்.

டெல்லி அணி வெற்றிபெற 17.3 ஓவர்களை கடந்துவிட்டதால் பெங்களூர் அணியின் ரன்ரேட் பெரிய அளவில் குறையவில்லை. அதனால், நாளை நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றாலும் அது பெங்களூர் அணிக்கு சிக்கல் இல்லை. கொல்கத்தா அணியை விட பெங்களூர் அதிக ரன் ரேட் வைத்துள்ளதால் எப்படியே ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடையும் பட்சத்தில் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். 

ப்ளே ஆஃப் சுற்றை பொறுத்தவரை மும்பை முதல் அணியாக உள்ளே சென்றது. தற்போது டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளன. நான்காவது அணி எது என்பது நாளைய போட்டியின் முடிவில் தெரிய வரும். இதனால், நாளைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com