பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முச்சதம் விளாசினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணி களுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னரும் பர்ன்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்திருந்த போது, ஷகின் ஷா அப்ரிதி பந்துவீச்சில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னருடன் லபுஸ்சக்னே இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி சதம் அடித்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. வார்னர் 166 ரன்களுடனும் லபுஸ்சக்னே 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. 162 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சக்னே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வார்னருடன், வேட் இணைந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய வார்னர், பாகிஸ்தானின் பந்துவீச்சை சிதறடித்தார்.
இரட்டை சதம் அடித்த அவர், தொடர்ந்து சிறப்பாக ஆடி, முச்சதம் அடித்தார். பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் பலனில்லை. இதனிடையே சிறப்பாக ஆடிய வார்னர், முச்சதம் விளாசினார். இது அவரது முதல் முச்சதம் ஆகும். முச்சதம் அடித்த 7வது ஆஸ்திரேலிய வீரர் இவர்.
அவருக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.