ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிராடை புகழ்ந்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பிராட் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இரண்டு போட்டிகளில் அவரது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை பிராட் செய்துள்ள நிலையில், அவரை புகழ்ந்துள்ளார் டேவிட் வார்னர்.
“வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தேர்வு குழுவினர் அவரை ஆடும் லெவேன் அணியில் சேர்க்காதது ஏன் என்றே புரியவில்லை. ஏனென்றால் கடந்த ஒன்றரை வருடங்களாக பிராட் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனால் அதற்கடுத்த இரண்டு போட்டிகளில் அவருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுத்த போது அசத்திவிட்டார். இங்கிலாந்து மண்ணில் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டுமென்ற வித்தையை அறிந்தவர் பிராட். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவரது பந்து வீச்சை எதிர்கொள்வதே நரக வேதனையாக இருக்கும்” என வார்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பத்து இன்னிங்ஸ் விளையாடிய வார்னரை ஏழு முறை வீழ்த்தியிருந்தார் பிராட் என்பது குறிப்பிடத்தக்கது.