இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றன. இதனையடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 17 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது பீல்டிங்கில் ஈடுபட்டபோது டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, டி20 தொடரில் அவர் விளையாடவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் வார்னர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தும் வார்னர் விலகியுள்ளார்.
இது குறித்து வார்னர் கூறும்போது "எனது காயத்தின் தன்மை குணமடைந்துவிட்டதாக உணருகிறேன். ஆனால், டெஸ்ட் போட்டியில் ரன் எடுக்க வேகமாக ஓடுவதற்கும், களத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் 100 சதவீதம் தயார் என்பதை எனது மனதிற்கும், அணியினருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய திறனுடன் நான் இருக்க வேண்டியது அவசியமானது.
இப்போது என்னால் சிறப்பான உடல் தகுதியுடன் இருக்கும்போது விளையாடுவது போல் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். அடுத்த 10 நாட்களில் இந்த நிலைமையில் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். விரைவில் தயாராவேன்" என தெரிவித்துள்ளார்.