பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படிதான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் இப்போது மனம் திறந்துள்ளார். அவர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’நான் சிட்னி திரும்பிக் கொண்டிருக்கிறேன். எனது தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இதனால் ஏற்பட்டுள்ள துன்பத்தை நான் புரிந்துகொண்டுள்ளேன். விளையாட்டை நாம் எல்லாருமே நேசிக்கிறோம். நான் சின்ன பையனாக இருக்கும்போதே நேசித்தேன். என் குடும்பத்தினருடன் நண்பர்களுடன் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களுடனும் நேரத்தை செலவிட இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.