இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆகியோர் பங்கேற்கப்போவதில்லை என்று அந்த அணியின் பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தின்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்ட வார்னர் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸுக்கான பணிச்சுமையை குறைக்கும் வகையில் கடைசி ஆட்டத்தில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கர் "டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான எங்களது திட்டத்துக்கு வார்னர் மற்றும் கம்மின்ஸ் முக்கியமானவர்கள். உள்நாட்டிலேயே நடைபெறும் மிக முக்கியமான டெஸ்ட் தொடருக்கு அவர்கள் முழுமையாகத் தயாராக வேண்டும். அதிலும் இந்தத் தொடரின் புள்ளிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முக்கியம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "எனவே, காயமடைந்துள்ள வார்னர் அதிலிருந்து மீண்டு டெஸ்ட்டுக்கு தயாராக அவகாசம் அவசியமாகும். உடற்தகுதி மற்றும் உளவியல் ரீதியாக வீரா்களுக்கான பணிச்சுமையை குறைப்பது முக்கியமாகும். எனவே கம்மின்ஸுக்கு கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஓய்வளித்துள்ளோம்" என்றார் அவர்.