இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் இன்று இரவு டெல்லியில் தொடங்கிய முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான கெய்க்வாட், இஷான் கிஷன் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடினர். அதிரடியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ருதுராஜ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து இஷானுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். தென் ஆப்பிரிக்கா சுழற்பந்துவீச்சாளர் ஷம்சியின் ஓவரில் சிக்ஸர்களை விளாசி தள்ளினார். மறுபுறம் நிதானமாகவவும், அதிரடியாகவும் விளையாடிய இஷான் கிஷன் அரை சதம் விளாசி, தொடர்ந்து ஜெட் வேகத்தில் ரன்களை குவிக்க தொடங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறுதியில் ரன்களை குவிக்க தொடங்கினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்களை விளாசி அசத்தினார்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்கா அணி. துவக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் பவுமா ஆகியோர் களமிறங்கிய நிலையில், கேப்டன் பவுமா 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் பந்து வீச்சில் அவுட்டானர். இதையடுத்து களமிறங்கிய டூவைன் பிரிட்டோரியஸ் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணியின் ரன் ரேட் உயர்ந்த நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்பிறகு 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த குயிண்டன் டி காக் பெவிலியனுக்கு நடையை கட்ட, களத்தில் துஷன் மற்றும் டேவிட் மில்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒருகட்டத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி திரும்பிக் கொண்டிருந்தநிலையில், 15-வது ஓவரில் இருந்து இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர் துஷன் மற்றும் டேவிட் மில்லர்.
இதனால் சிக்ஸர்களாக இருவரும் அடித்து வெளுக்க ரன்கள் மளமளவென குவிந்தநிலையில், 17-வது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் பக்கம் வெற்றி திரும்பியது. இறுதியில், 19.1 ஓவரிலேயே 212 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. துஷன் 75 ரன்களிலும், மில்லர் 64 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். இதையடுத்து 1 - 5 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.