இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.
இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 273 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
பின்னர் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் குக் (12 ரன்), மொயீன் அலி (9 ரன்), ஜென்னிங்ஸ் (36 ரன்), பேர்ஸ்டோ (0) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும், பட்லர் 69, ஜோ ரூட் 48 ரன்கள் எடுக்க மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. கர்ரன் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்நிலையில்,நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி தரப்பில் கர்ரன், பிராட் பேட்டிங் செய்தனர். மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காத நிலையில் முகமது சமி பந்துவீச்சில் பிராட் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய கர்ரன் 46 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இதனால், இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு 245 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. தொடக்க வீரரான கே.எல்.ராகுல் டக் அவுட் ஆக, முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய புஜாரா 5 ரன்னில் நடையை கட்டினார். இந்திய அணி 17 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் முழுமையாக இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விக்கெட்கள் மட்டும் விழாமல் இருந்தாலே இந்திய அணியால் வெற்றி பெற்றுவிட முடியும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் தொடரானது 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விடும்.