கிராமத்திலிருந்து புயலாய் கிளம்பியவனின் கோப்பை கனவு! மைதானத்திலேயே கண்கலங்கிய உனாத்கட்!

கிராமத்திலிருந்து புயலாய் கிளம்பியவனின் கோப்பை கனவு! மைதானத்திலேயே கண்கலங்கிய உனாத்கட்!
கிராமத்திலிருந்து புயலாய் கிளம்பியவனின் கோப்பை கனவு! மைதானத்திலேயே கண்கலங்கிய உனாத்கட்!
Published on

15 வருடங்களில் இரண்டாவது முறையாக விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது உனாத்கட் தலைமையிலான சவுராஸ்டிரா அணி.

இந்திய அணியிலிருந்து வெளியேற்றம், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றம் என்பதையெல்லாம் கடந்து, தன்னுடைய சவுராஸ்டிரா அணிக்கு 14 வருடங்களுக்கான கோப்பை கனவை நிஜமாக்கி கொடுத்திருக்கிறார் இந்திய அணியின் வீரர் ஜெயதேவ் உனாத்கட்.

இந்திய அணியில் வெறும் 18 போட்டிகள் மட்டும் தான்!

2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உனாத்கட். அதற்கு பிறகு 2013ல் ஒருநாள் போட்டி அறிமுகம், 2016ல் டி20 போட்டியில் அறிமுகம் என அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கினாலும், இந்திய அணியில் ஒரு டெஸ்ட் போட்டி, 7 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டும் தான் விளையாடினார். 2018ஆம் ஆண்டிற்கு பிறகு அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் மறுக்கப்பட்டது.

2017-18 விஜய் ஹசாரே டிரோபி பைனலில் தோல்வி!

2017ஆம் ஆண்டின் விஜய் ஹசாரே டிரோபி ஒருநாள் கோப்பை தொடரில் சட்டீஸ்வர் தலைமையிலான சவுராஸ்டிரா அணி பங்கேற்று ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை சென்ற சவுராஸ்டிரா பைனலில் கர்நாடகா அணியை எதிர்கொண்டது. 10 வருட கோப்பை கனவை வெல்ல 253 ரன்களை விரட்டிய சவுராஸ்டிரா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிபோட்டியில் தோல்வியை சந்தித்தது.

2007 கோப்பைக்கு பிறகான கனவு நீண்டுகொண்டே சென்றது.

2018 ஐபிஎல்-ல் 11.5கோடிக்கு ஏலம் போன உனாத்கட்!

2018ஆம் ஆண்டு ஐபிஎல் ஆக்சனில் உனாத்கட்-ஐ 11.5 கோடி என்ற அதிக விலைக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதுவரை அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறுமுகம் இறங்குமுகமாக இருந்தவருக்கு சில நல்ல வாய்ப்புகள் அமையத்தொடங்கியது.

2019-20ல் 86 வருடங்களுக்கு பிறகு ரஞ்சிக்கோப்பையை வென்று தந்த உனாத்கட்!

அதுவரையான ரஞ்சிக்கோப்பை தொடர்களில் சவுராஸ்டிரா அணி கோப்பையையே வென்றதில்லை. 2012, 2015, 2018 என மூன்று முறை ரஞ்சிக்கோப்பையின் இறுதிப்போட்டிவரை வந்த சவுராஸ்டிரா அணியில் வெறும் தோல்வியை மற்றுமே சந்தித்து வந்தது. 2018ற்கு பிறகு சிறந்த ஃபார்மில் இருந்த உனாத்கட் இடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

2019-20 ரஞ்சிக்கோப்பை தொடரில் உனாத்கட் தலைமையில் களமிறங்கிய சவுராஸ்டிரா அடுத்தடுத்து அதிரடியான வெற்றிகளை பெற்று, இறுதிப்போட்டி வரை சென்று நின்றது. அதற்கு முன் மூன்று தோல்வியையே சந்தித்து இருந்ததால் இந்த முறையும் தோல்வியை தான் சந்திக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் பெங்கால்-ஐ எதிர்கொண்ட சவுராஸ்டிரா முதல்முறையாக 86 வருடங்கள் கழித்து ரஞ்சிக்கோப்பையை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரையும் பொறித்துக்கொண்டது.

2021 இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து மனமுடைந்து லெட்டர் வெளியிட்ட உனாத்கட்!

என்னதான் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தாலும், சர்வதேச போட்டிகள் மட்டுமில்லாமல், முதல்தர போட்டிகளிலும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது உனாத்கட்டிற்கு. அப்போது ரஞ்சிக்கோப்பையில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருந்தார் உனாத்கட்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து விரக்தியிலும் மன உளைச்சலிலும் டிவிட்டரில் லெட்டர் ஒன்றை வெளியிட்டார், உனாத்கட். அதில், ”நான் சிறுவனாக இருந்தபோது, விளையாட்டின் அனைத்து ஜாம்பவான்களும் மைதானத்தில் முழு மனதுடன் விளையாடுவதைப் பார்த்து உத்வேகம் பெற்றேன். இத்தனை வருடங்கள் கழித்து, அதை நானே அனுபவித்தேன்” என்று கூறியிருந்தார். மேலும் நான் இளமையாக இருந்தபோது, சிலர் என்னை ஒரு மோசமான, ஒழுங்கற்ற பந்துவீச்சாளர், ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து கனவு காண்கிறாய், அதுவெல்லாம் உனக்கு பளிக்காது என்று முத்திரை குத்தினார்கள். காலப்போக்கில் அவர்களையே நான் நன்றாக விளையாடுகிறேன் என்று பேச வைத்ததே என் அனுபவம் பெற்றுத்தந்தது. நான் என்னை வளர்த்துகொண்டே இருக்கிறேன், இதுவரை எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கும், என்னை ஆதரித்தவர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எனது அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கவிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

15 வருட விஜய் ஹசாரே கோப்பையையும் நிறைவேற்றிய ஒரு கிராமச்சிறுவன்!

2017ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிரோபி பைனலில் தோல்வியடைந்ததை அடுத்து, 2021ல் சவுராஸ்டிரா அணியை வழிநடத்தும் பொறுப்பு உனாத்கட்டிடம் வந்தது. இந்த ஆண்டு தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுராஸ்டிரா அணி, காலியிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியிடம் தோல்விபெறும் என்று நினைத்த இடத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் பலம்வாய்ந்த கர்நாடகா அணியை எதிர்கொண்ட சவுராஸ்டிரா அணி, உனாத்கட்டின் 4 விக்கெட்டுகள் என்ற அற்புதமான பந்துவீச்சால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் சென்றது.

இறுதிப்போட்டியில் ருதுராஜ் 133 ரன்கள் அடித்து மிரட்டினாலும், நிதானத்தை வெளிப்படுத்திய சவுராஸ்டிரா அணி வெற்றிபெற்று 15 வருடத்திற்கு பிறகு கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

கண்கலங்கிய உனாத்கட்!

விஜய் ஹசாரே கோப்பையை வென்றதற்கு பிறகு மைதானத்தில் முழங்கால் இட்டு அமர்ந்த உனாத்கட் கண்கலங்கியபடியே சிறிது நேரம் இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com