துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த ஆட்டத்தின் டாப் 10 தருணங்களை காணலாம்.
1. நல்ல தொடக்கம் கொடுத்த கே.எல்.ராகுல் - மயங்க்
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல். அதனையடுத்து தொடக்க வீரர்களான மயங்க் அகர்வாலும், கே.எல் ராகுலும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
இவர்கள் இருவரது கூட்டணியும் 49 பந்துகளில் மொத்தமாக 62 ரன்களை சேர்த்தது.
2. சென்னை பவுலிங்கை அடித்து நொறுக்கிய மன்தீப் சிங்
கருண் நாயருக்கு மாற்றாக களம் இறங்கிய மன்தீப் சிங் ஒன்டவுனில் இறங்கி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
3. நின்று விளையாடிய கே.எல். ராகுல்
இந்த சீஸனில் 302 ரன்களை குவித்து லீடிங் பேட்ஸ்மேனாக அசத்தி வருகிறார் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல். நல்ல ஃபார்மில் உள்ள அவர் இந்த ஆட்டத்திலும் அதை கேரி செய்து 52 பந்துகளில் 63 ரன்களை குவித்திருந்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
4. அதிரடி காட்டிய பூரான்
டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரான் 17 பந்துகளில் 33 ரன்களை குவித்து அதிரடி காட்டினார். அவரது இன்னிங்சில் மூன்று சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும்.
5. பேக் டூ பேக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர்
ஆட்டத்தின் 18வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர் முதல் இரண்டு பந்துகளில் நிக்கோலஸ் பூரான் மற்றும் கே.எல்.ராகுலை கைப்பற்றி, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
6. பொளந்து கட்டிய வாட்சன் - டூப்ளஸி
சென்னை அணிக்கு இந்த சீஸனின் ஆரம்பம் முதலே ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வந்த வேளையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர் வாட்சன் மற்றும் டூப்ளஸி. இருவரும் 181 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதன் மூலம் சென்னை அணிக்கு அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் என்ற சாதனையை படைத்தனர் வாட்சன் - டூப்ளஸி ஜோடி.
7. ஃபார்மை கேரி செய்த டூப்ளஸி
சென்னை அணிக்கு இந்த சீஸனில் ஆரம்பமே முதலே அமர்க்களமாக ஆடி வரும் பேட்ஸ்மேன் டூப்ளஸி. நல்ல ஃபார்மில் உள்ள அவர் இந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் 87 ரன்களை குவித்திருந்தார். மொத்தமாக ஐந்து ஆட்டங்களில் 282 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த வீரர்களில் இரண்டாவதாக இடம் பிடித்துள்ளார்.
8. கம்பேக் கொடுத்த வாட்சன்
கடந்த நான்கு போட்டிகளையும் சேர்த்து வெறும் 52 ரன்களை மட்டுமே குவித்திருந்தார் வாட்சன். ஃபார்மை இழந்து தவித்து வந்த அவரை ஆடும் லெவனிலிருந்து கழட்டி விட வேண்டுமென பலரும் சொல்லி வர அதற்கு மாறாக வாட்சனுக்கு தன் முழு ஆதரவை கொடுத்து வந்தார் தோனி. அவரது நம்பிக்கையை வீண்போக செய்யாமல் ரன்களை குவித்து இந்த சீஸனில் கம்பேக் கொடுத்துள்ளார் வாட்சன்.
9. சொதப்பிய பஞ்சாப் பவுலர்கள்
விக்கெட் வீழ்த்த வேண்டுமென்ற நோக்கத்தோடு பந்து வீசிய பாஞ்சாப் பவுலர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. காட்ரல், ஜார்டன், பிஷோனி, ஹர்ப்ரீத், ஷமி மாதிரியான பவுலர்கள் அதிக ரன்களை லீக் செய்திருந்தனர்.
10. அணியை மாற்றாத தோனி
வழக்கமாக ஐபிஎல் மாதிரியான தொடர்களில் வீரர்கள் சரிவர ஆடாத போது அவர்களை பெஞ்சில் உட்கார வைப்பது வழக்கம். ஆனால் அதுமாதிரியான முயற்சிகளை செய்யாமல் சென்னை அணியில் விளையாடி வரும் வீரர்கள் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், அணியை மாற்றாமல் வாட்சன், கேதர் ஜாதவ், பியூஸ் சாவ்லாவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு திரும்ப செய்துள்ளார் வாட்சன்.