மும்பைக்கு எதிரான ஆட்டத்தைப் போல, இன்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் முக்கிய கேட்சுகள், ரன் அவுட்களை தவற விட்டதால் பஞ்சாப் அணி 187 ரன்களை குவித்தது.
ஐபிஎல் 2022 தொடரில் மும்பை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. வெற்றிபயணத்திற்கு திரும்பும் முனைப்பில் பஞ்சாப் அணியும் வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சென்னை அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் ஓப்பனர்களாக மயங்க் அகர்வாலும் ஷிகர் தவானும் களமிறங்கினர். விக்கெட் இழக்கக் கூடாது என்ற முடிவில் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஸ்கோர் பொறுமையாக உயரத் துவங்கியது. பவுண்டரிகளை மயங்க் அகர்வால் விளாசத் துவங்கிய போது, 2வது ஓவரில் ஒரு ரன் அவுட் வாய்ப்பு வந்ததை ஜடேஜா தவற விட்டு அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து 4வது ஓவரில் மீண்டும் மயங்க் கொடுத்த இன்னொரு ரன் அவுட் வாய்ப்பை சாண்ட்னர் மிஸ் செய்தார். நல்வாய்ப்பாக மயங்க் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தும்முன் அவர் கொடுத்த கேட்சை ஷிவம் துபே பிடித்தார். ஆனால் மறுபக்கம் தவான் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாச ரன் ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது. பஞ்சாப் பவர்பிளே முடிவில் 72 ரன்கள் குவித்து சென்னை பவுலிங்கை திணறடித்தது.
அடுத்து வந்த பனுகா ராஜபக்சேவும் தன் பங்குக்கு பவுண்டரி, சிக்ஸர்களை பறக்க விடத் துவங்கினார். 9வது ஓவரில் பவுண்டரி லைன் அருகே அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சாண்ட்னர் மிஸ் செய்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மறுபக்கம் மும்பைக்கு எதிராக அனல் கிளப்பிய முகேஷ் சவுத்ரி ஓவரில் தவான் ஹாட்-ட்ரிக் பவுண்டரி விளாசினார். அற்புதமாக விளையாடி அரைசதம் விளாசி அசத்தினார் ஷிகர் தவான்.
அரைசதத்தை நெருங்கிய நிலையில் ராஜபக்சே பிராவோ பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை பிரிப்பதற்குள் சென்னை பவுலிங் பெரும் போராட்டத்தையே நடத்தியது. அந்த பதட்டத்தில் சென்னை பவுலர்கள் அதிக “வைடு” ,“நோ” பால்களாக வீசி 14 ரன்களை வாரி வழங்கினர்.
அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன், பிரட்டோரியஸ் வீசிய 19வது ஓவரில் சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். பிராவோ வீசிய கடைசி ஓவரில் லிவிங்ஸ்டன் அவுட்டாகி நடையைக் கட்ட, அடுத்து வந்த பேர்ஸ்டோ தன் பங்குக்கு அதிரடி காட்டினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது பஞ்சாப். 59 பந்துகளை சந்தித்த தவான் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 88 ரன்கள் குவித்து அசத்தினார். 188 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.