ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் சென்னை வீரர்கள் தனிக்காட்டு ராஜாவாக ஐபிஎல் களத்தை ஒரு ரவுண்டு வருவார்கள்.
ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில் அது அனைத்துமே சென்னை அணிக்கு எதிராக அமைந்துள்ளது.
சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே துபாயிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார்.
அப்போதிலிருந்தே அவர் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற விவாதம் எழ முதல் போட்டியில் ராயுடுவை இறக்கி ஆட செய்தார் தோனி. தசைப்பிடிப்பு காரணமாக அதற்கடுத்த இரண்டு போட்டிகளையும் ராயுடு மிஸ் செய்ய மொத்தமாக சொதப்பி வருகின்றனர் சென்னை பேட்ஸ்மேன்கள்.
ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிராக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது சென்னை. இதில் பேட்ஸ்மேன் டுப்லெஸிஸ் மட்டுமே சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸின் சின்ன தலையான ரெய்னாவை மீண்டும் விளையாட வர சொல்லி செல்லமாக அன்பு கட்டளையிட்டு வருகின்றனர் சென்னை ரசிகர்கள்.
COMEBACK Mr.IPL என ட்விட்டரில் ரசிகர்கள் ரெய்னாவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரெய்னாவின் கம்பேக் குறித்த தகவலை தெரிவித்துள்ளார் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்…
“நான் முன்பே சொல்லியிருந்தது போல அடுத்த போட்டிக்கு காயம்பட்டுள்ள ராயுடு தயாராகிவிடுவார். அதே போல கடந்த போட்டிகளில் செய்த தவறுகளையும் சரி செய்ய வேண்டியுள்ளது.
அதே போல ரெய்னா தான் இந்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதனால் அவரது கம்பேக் குறித்து நாங்கள் எதுவும் யோசிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 2ம் தேதியன்று தான் ஹைதராபாத் அணியுடன் சென்னை அடுத்த லீக் ஆட்டத்தில் மோதவுள்ளது.