துபாயில் நடைபெறும் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, சென்னையை முதலில் பேட் செய்ய சொல்லி பணித்தது.
டூ பிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இந்த சீசனில் இருவரும் 756 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இணைந்து சேர்த்த அதிகபட்ச ரன்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளனர். கோலி-டிவில்லியர்ஸ் மற்றும் வார்னர்-பேர்ஸ்டோ முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
ருதுராஜ் 27 பந்துகளில் 32 ரன்களை சேர்த்து அவுட்டானார். தொடர்ந்து வந்த உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்தார். மறுபக்கம் டூ பிளசிஸ், லாங்-ஆஃப் திசையில் சிக்சர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மூன்றாவது ஓவரில் டூ பிளசிஸ், கிரீஸில் தனது பேலன்ஸை இழந்திருந்தார். அதை பயன்படுத்தி கொல்கத்தா விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்ய தவறினார். அதை டூ பிளசிஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
இறுதி வரை விளையாடிய டூ பிளசிஸ் 59 பந்துகளில் 86 ரன்களை எடுத்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவுட்டானார். மொயின் அலி 20 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். அதில் 3 சிக்சர்கள் அடங்கும்.
இருபது ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணிக்காக நரைன் மற்றும் ஷவம் மாவி மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அந்த அணியின் பலமே மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது தான். அதை இந்த போட்டியில் தவறவிட்டுள்ளது.
20 ஓவர்களில் 192 ரன்களை எடுத்தால் கொல்கத்தா கோப்பையை வெல்லும். இருப்பினும் இது பேட்டிங் ஆடுகளம் என்பதால் கொல்கத்தா அணிக்கும் ரன் குவிப்பில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. 2014ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற போது, பெங்களூர் அணிக்கு எதிராக 199 ரன்கள் சேஸ் செய்திருந்தது கொல்கத்தா அணி. அதேபோல், 2012 சென்னை அணிக்கு எதிராக 191 ரன்களை சேஸ் செய்து கோப்பையை தட்டினார்கள்.
வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், ரானா, சுனில் நரேன், தினேஷ் கார்த்திக், மோர்கன் என பேட்டிங் பட்டாளமே அந்த அணியில் இருக்கிறது. சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தே அதன் வெற்றிக் கனவு நிறைவேறும். தோனியின் கேப்டன்சி சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.